சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.2500 கோடியை அரசிடம் கோரியுள்ளோம்: உயர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் தகவல்

0
0

 2015-ம் ஆண்டு வெள்ளப் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.2 ஆயிரத்து 500 கோடி அரசிடம் கோரியுள்ளதாகவும் வருவாய்த் துறை செயலாளரும், வருவாய்த் துறை ஆணையரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சென்னை சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையில் 13 மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடம் கட்டுவது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வெள்ளப் பாதிப்புள்ள பகுதியில் இந்தக் கட்டிடத்திற்கு அனுமதியளித்த வருவாய்த் துறை செயலாளர், வருவாய்த் துறை ஆணையர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய்த் துறை ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அவர்கள் உயர் நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், ”2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக ஆய்வு செய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி தடுப்பதற்கு விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளோம். வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 2 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கோரியுள்ளோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2015-ம் ஆண்டு வெள்ளத்தின் போது, 859 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின எனக் குறிப்பிட்ட அதிகாரிகள், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, வர்தா புயலின் போது 50 இடங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் அதிகாரிகளை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.