சென்னை, புறநகர் பகுதியில் காற்றுடன் கன மழை

0
0

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சென்னை மாநகரப் பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் வெயில் குறைந்து, குளிர்ந்த சூழல் நிலவியது. இதற்கிடையில் மாலை நேரத்தில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. அதன் பின்னர் மழை புறநகர் பகுதிகளுக்கும் பரவியது.

சென்னையில், சேப்பாக்கம், ராயப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அடையாறு, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோயம்பேடு, கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 22 மிமீ மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

மழையின் காரணமாக வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன. அதனால் மாலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல இருந்தவர்கள் அவதிக்குள்ளாயினர். இருப்பினும் சென்னை குளிர்ச்சியை பெற்றது.