சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு மாற்றுப்பாதை குறித்து ஆராய நிபுணர் குழு: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

0
0

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டத்துக்கான மாற்றுப்பாதை குறித்து ஆராய நிபுணர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜனநாயக உரிமை போராட்டங்களை ஒடுக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் நடந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

சட்டப்பேரவையில் பல்வேறு கருத்துகளை எடுத்துச் சொன்னால், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் பேச விடுவதில்லை. உடனடியாக, சபாநாயகர் அவற்றை எல்லாம் நீக்கி விடுகிறார். தூத்துக்குடி என்ற வார்த்தையையே சொல்லக்கூடாது என்ற நிலை பேரவையில் உருவாகியிருக்கிறது. பல போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கின்றன.

இப்போது சென்னையில் இருந்து சேலம் வரை 8 வழிச் சாலை திட்டத்தை நிறைவேற்ற முன்வந்திருக்கிறார்கள். சட்டப்பேரவையில் இந்த திட்டத்தை அறிவித்தபோது, இதனால் மக்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்பதை அறிய அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். அதன் பிறகு இந்த திட்டத்தை கொண்டு வந்தால் வரவேற்க காத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறோம்.

சென்னை – சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து ஆராய ஒரு நிபுணர் குழுவை அரசு அமைக்க வேண்டும்.

அந்தக் குழு மக்களை சந்திக்கட்டும். ஏதேனும் மாற்றுப் பாதை இருக்கிறதா என்று சிந்திக் கட்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்தப் போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் டி.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாலையில் உண்ணாவிரதத்தை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி முடித்து வைத்தார்.