சென்னையை சுற்றிப்பார்க்க வந்த டெல்லி கல்லூரி மாணவர் மீது தாக்கு: லேப்டாப், செல்போன், பணம் பறிப்பு

0
0

 சென்னையைச் சுற்றிப் பார்க்க வந்த டெல்லியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர் ஆட்டோவில் செல்லும்போது ஐந்துபேர் கொண்ட மர்ம கும்பல் அவரைத்தாக்கி லேப்டாப், ஐபோன், ரொக்கப் பணத்தைப் பறித்துச் சென்றனர்.

டெல்லி நிஜாமுதீனைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ் (20) சென்னை வந்துள்ளார். நேற்றிரவு 10 மணியளவில் மத்திய கைலாஷ் பகுதியில் ஆட்டோவில் வந்துள்ளார்.

அப்போது 5 நபர்கள் ஆட்டோவை மறித்து மாணவர் நிதிஷைத் தாக்கி அவரிடம் இருந்த ஒரு சவரன் தங்க மோதிரம், ரொக்கப் பணம் ரூ.25,000, லேப்டாப், ஐபோன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

சரமாரியாக தாக்கப்பட்டதால் மாணவர் நிலைகுலைந்து அங்கேயே விழுந்துவிட்டார். பின்னர்அவரை பொதுமக்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பெற்றுள்ளார். புற நோயாளியாக சிகிச்சை பெற்ற அவர் அங்கு மேற்கண்ட தகவலைப் புகாராகப் பதிவு செய்துள்ளார்.

தான் பெசன்ட் நகரில் உள்ள ஒரு தனியார் ஒட்டலில் தங்கியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். மேற்கண்ட தகவல் போலீஸார் பார்வைக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பேரில் போலீஸார் அந்த ஓட்டலுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது அவரை அங்கு காணவில்லை.

மாணவர் என்ன ஆனார், டெல்லி சென்றுவிட்டாரா? அல்லது தெரிந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்று விட்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தபோது மாணவர் புகார் அளிக்கவில்லை, ஆனாலும் கிடைத்த தகவலை வைத்தும், கண்காணிப்பு கேமரா எதுவும் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.