சென்னையில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடி ஏன்? – காவல்துறை விளக்கம்

0
0

திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அஞ்சலி செலுத்தவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றி காவல்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி காலமானதை தொடர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த சென்னையில் ஏராளமானோர் திரண்டனர். ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். விவிஐபிக்கள், விஐபிக்களும் வந்தனர்.

அப்படி வந்தவர்களில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு உள்ளவர்கள். பிரதமர் மோடி வந்தபோது, அவருக்கு கடும் போலீஸ் பாதுகாப்பு இருந்தது. ஆனால் அவர் வந்து சென்ற பிறகு ராஜாஜி ஹாலில் பாதுகாப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த புகாரை சென்னை மாநகர காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரிகள் நியூஸ்7 பேப்பர்விடம் (ஆங்கிலம்) கூறுகையில் ‘‘ராகுல் காந்தி வருகை மாற்றப்பட்ட தகவல்களை சென்னை போலீஸாருக்கு தெரிவிக்கவில்லை. ராஜாஜி ஹாலுக்கு அவர் பிற்பகல் 3:15 மணிக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றப்படி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தோம். ஆனால் எந்தவித தகவல்களையும் தெரிவிக்காமல் முன்கூட்டியே பிற்பகல் 2.05 மணிக்கு அவர் வந்துள்ளார்.

ராகுல் காந்திக்கு பாதுகாப்பு வழங்க உதவி ஆணையர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவருக்காக முழு அளவில் நாங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தோம். அவருக்கென பிரத்யேகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

ராஜாஜி ஹாலுக்கு அவரது வருகை 3:15 மணி என்பதால் அதற்கு அரைமணிநேரம் முன்னதாக அதிகாரிகள் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டு இருந்தனர். அரைமணிநேரம் முன்னதாக அதிகாரிகள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பணியை ஏற்று செய்ய தயாராக இருந்தனர்.

ஆனால் திடீரென 2:05 மணிக்கே ராகுல் காந்தி அங்கு வந்து விட்டார். முன்கூட்டியே வருவது தொடர்பாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்கென பிரத்யேமாக திட்டமிடப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.