சும்மா இருக்கிறவன் கையில் பல கோடி கிடைச்சா… ‘எங்க காட்டுல மழை’! விமர்சனம் | Enga kattula mazhai review

0
0

சென்னை: வேலை வெட்டிக்கு போகாத இளைஞனின் கையில் பல கோடி கிடைத்தால், அவர் காட்டில் மழை தானே. இது தான் எங்க காட்டுல மழை படத்தின் ஒன்லைன்.

நடிகர்கள் – மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புக்குட்டி, அருள்தாஸ் மற்றும் பலர், இயக்கம் – ஸ்ரீ பாலாஜி, தயாரிப்பு – சி.ராஜா, இசை – ஸ்ரீ விஜய்

மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் நாயகன் மிதுனுக்கு காரில் லிப்ட் கொடுக்கிறார் மற்றொரு மதுரைக்காரர். சொந்த ஊர் காரர் என்பால் வீட்டிலும் தங்குவதற்கு இடம் தருகிறார். வேலை வெட்டிக்கு போகாமல் சும்மாவே ஊர் சுற்றித்திரியும் மிதுனுக்கு ஸ்ருதி ராமகிருஷ்ணன் மீது காதல் மலர்கிறது. இதற்கிடையில் தனது ஊர்கார நண்பன் அப்புக்குட்டியை சந்திக்கிறார் மிதுன். இருவரும் சேர்ந்து பாசக்கார மதுரைக்காரன் வீட்டில் ஓசியில் வாழ்க்கையை என்ஜாய் செய்கிறார்கள்.

Enga kattula mazhai review

இதற்கிடையே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை வெளிநாடு கடத்த திட்டமிடுகிறது உள்ளூர் ரவுடி கும்பல் ஒன்று. இதை மோப்பம் பிடிக்கும் பணச்தாசை பிடித்த கொடூர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்தாஸ், அந்த கும்பலிடம் இருந்து பணத்தை அடிக்கிறார். ஆனால் அவரை ஏமாற்றி அதை தட்டிச் செல்கிறார் மிதுன். இதற்கடுத்து என்னாகிறது என்பது காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ பாலாஜி.

குள்ள நரிக்கூட்டம் படத்திற்கு பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து ஸ்ரீ பாலாஜி இயக்கி இருக்கும் படம் எங்க காட்டுல மழை. முந்தைய படத்தை போலவே இதையும் ஜாலியாக சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் அலுப்பு தான் வருகிறது.

பல படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்த மிதுனுக்கு இந்த படம் மூலம் ஹீரோ புரோமோஷன். தன்னால் முடிந்த அளவிற்கு நடித்திருக்கிறார். நாயகியாக வரும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் வசீகர கண்களால் கவனம் ஈர்க்கிறார்.

Enga kattula mazhai review

அப்புக்குட்டியும் அவரது பெட் நாய் ரோமியோவும் காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் பழைய தேவர் பிலீம்ஸ் காலத்துலேயே பார்த்துவிட்டதால் சிரிப்புக்கு பதில் சலிப்பு தான் வருகிறது.

ஸ்ரீ விஜய் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவில் எல்லாக் காட்சிகளும் பளிச் என தெரிகிறது. பலக்காட்சிகள் மிக நீளமாக இருக்கிறது என்பதை எடிட்டர் ஜஸ்டின் ராய் கவனித்தாரா என்பது தெரியவில்லை.

Enga kattula mazhai review

சும்மா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுபவன் கையில் கிடைத்த இந்த தொகை, நல்ல உழைப்பாளியின் கிடைத்திருந்தால் அடைமழையாக பெய்திருக்கும்.

அப்புக்குட்டி

ஸ்ரீ பாலாஜி