சுனந்தா புஷ்கர் வழக்கு: வெளிநாடுகளுக்கு செல்ல சசி தரூருக்கு அனுமதி

0
0

சுனந்தா புஷ்கர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது கணவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசிதரூரை வெளிநாடுகளுக்கு செல்ல டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதில், அவர் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இரு வேறு வியூகங்கள் நிலவுகின்றன.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீஸார், சுனந்தா புஷ்கரின் கணவர் சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், மனைவியை கொடுமை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர் மீது டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் அண்மையில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். எனினும், இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு செல்ல அனுமதி கோரி, சசிதரூர் சார்பில் டெல்லி மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சமர் விஷால், ரூ.2 லட்சம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும்; வழக்கின் சாட்சியங்களை அழிக்க முயற்சிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி வழங்கினார்.