சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு முன்ஜாமீன்

0
0

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று முன்ஜாமீன் வழங்கியது.

சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் சசி தரூர் கொண்ட நட்பே சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்டது. இதனால் சுனந்தா வின் மரணத்தில் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக டெல்லி போலீஸார் கடந்த மே 14-ம் தேதி சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் சுனந்தாவை சசி தரூர் கொடுமைப் படுத்தியதற்காக முகாந்திரம் இருப்பதாகவும் மேலும் சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வரும் 7-ம் தேதி நேரில் ஆஜராக சசி தரூருக்கு நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதால் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் தனது தீர்ப்பை மறுநாள் அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில் நேற்று சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ரூ.1 லட்சம் மதிப்புள்ள பிணைப் பத்திரம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, ஆதாரங்களை அழிக்க முயற்சிக்க கூடாது, நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனை விதித்தார்.