சீன மனித உரிமை செயற்பாட்டாளர் கின் யாங்மினுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை

0
0

பெய்ஜிங்

சீனாவில் அரசுக்கு விரோதமாக செயல்பட்டதாக, பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் கின் யாங்மினுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

64 வயதான கின் யாங்மினுக்கு ஊகன் நகரில் உள்ள நடுநிலை மக்கள் நீதிமன்றம் நேற்று இத்தண்டனை வழங்கியது. யாங்மினின் அரசியல் உரிமைகள் 3 ஆண்டுகளுக்கு பறிக்கப்படுவதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பை தொடர்ந்து யாங் மினுக்கு ஆதரவாக சீன மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கின் யாங்மின் குற்றவாளி அல்ல. ஜனநாயகம் மற்றும் மனித உரிமை களை பாதுகாக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். இதற்கு சீன அரசியல் சட்டம் பாதுகாப்பு வழங்கியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சீனாவின் புகழ்பெற்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கின் யாங்மின், 1990-களில் அந்நாட்டின் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக ஜனநாயக கட்சியை தொடங்கினார். இவர் தனது வாழ்நாளில் 22 ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். கின், அவரது மனைவி ஜாவோ சுலி ஆகிய இருவரும் கடந்த

2015 ஜனவரியில் காணாமல் போனார்கள். 2016 ஜூனில் கின் மீது முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2018 பிப்ரவரியில் உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக ஜாவோ சுலி விடுவிக்கப்பட்டார். இதற்கு முன் இவர் 2 ஆண்டுகளாக இவர் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சீன மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது ஊகன் நகரின் தனது மகனுடன் வசிக்கும் ஜாவோ சுலி தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

நோபல் பரிசு பெற்ற மற்றொரு மனித உரிமை செயல்பாட்டாளர் லியூ ஜியாபோவின் மனைவியும் வீட்டுக் காவலில் இருந்து வந்தவருமான லியூ ஜியாவை நாட்டை விட்டு வெளியேற சீனா நேற்று முன்தினம் அனுமதி வழங்கியது. இது கின் யாங்மின் வழக்கில் நம்பிக்கை ஏற்படுத்திய நிலையில் இத்தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என ஆம்னெஸ்டி இன்டெர்நேஷனல் சீன ஆய்வாளர் பேட்ரிக் பூன் தெரிவித்தார்.-டிபிஏ