சிலை கடத்தல் விவகாரம்; உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

0
0

சிலை திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோயில்களில் நடைபெறும் சிலை திருட்டு, கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிப்பதும், தண்டிப்பதும் மேலும் இதுபோன்ற நடவாமல் தடுப்பதும் மிக மிக முக்கியமான ஒன்று. எந்த ஒரு வழக்கிலும் உண்மை குற்றவாளிகளை விட்டுவிட்டு மற்றவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை உண்மை குற்றவாளிகளுக்கு வசதியானதாகவும் வழக்கை திசைதிருப்பும் ஒன்றாகவும் அமைந்துவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்ரீரங்கம் கோயில் பிரச்சினை சம்பந்தமாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும், உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்று. ஸ்ரீரங்கம் கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

பொதுவாக அறங்காவலர்கள் நியமிக்கப்படும் போது அரசியல் சார்ந்து அல்லது அரசியல் சாராதவர்கள் நியமிக்கப்படும் பொழுது ஆதாயம் கருதியோ, ஆடம்பரத்திற்காகவோ அப்பொறுப்புகளை வகிப்பது பலநேரங்களில் நடந்துள்ளது. ஆனால் வேணு சீனிவாசனைப் பற்றி பொதுவாக மக்களின் கருத்து பல ஆலயங்களின் மேம்பாட்டிற்காகவும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் பல கோடி ரூபாயை எந்தப் பிரதிபலனும் கருதாமல் செலவு செய்து கொண்டிருப்பவர் என்பதாகும்.

தற்போது அப்படிப்பட்ட ஒருவரையும் இவ்வழக்கில் குற்றம் சாட்டி இருப்பது உண்மை குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைகிறதோ? அல்லது வழக்கை திசைதிருப்பும் முயற்சியோ? என கருத வைத்துள்ளது.எனவே இவ்வழக்கை நேர்மையான, ஒரு சார்பற்ற முறையில் விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.