சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்; தமிழக அரசு திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதா?- விஜயகாந்த் சந்தேகம்

0
0

தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் பல ஆண்டுகளாக கோயில் சிலைகளும், விலை உயர்ந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை விசாரிப்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் சாமி சிலைகளையும், பொருட்களையும் மீட்டுள்ளனர்.

உதாரணமாக வெளிநாடுகளில் இருந்தும், குஜராத்திலிருந்தும் ராஜராஜசோழன் சிலையை மீட்டுக் கொண்டுவந்தார்கள். இதைப் பாராட்டி தமிழக அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்றார். பல சாமி சிலைகள் திருடு போயிருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து 100 கிலோ தங்கத்திற்கு மேலாக காணிக்கையாக பெறப்பட்டு, முழுமையாக திருடப்பட்டிருப்பதை பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் அவர்களை கைதும் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் முக்கியப் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து, சிபிஐயிடம் ஒப்படைத்திருப்பது பெரும் கண்டனத்திற்குறியது.

ஒரு துறையில் நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி, அதில் நடந்திருக்கும் குற்றங்களைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் நிலையில், நேர்மையான அதிகாரிகளுக்கு தமிழக அரசு துணைநின்று ஊக்கப்படுத்தாமல், திருடர்களுக்கு சாதகமாக அரசு முடிவு எடுப்பது, திருடர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. சாமி சிலைகளையும், கோயில் சொத்துகளையும் கொள்ளையடிப்பவர்களை சட்டத்தின் படி இரும்புக்கரம் கொண்டு தடுக்கவேண்டும்.

மேலும் கோயில் சொத்துகளைத் திருடுபவர்களையும், அவர்களைக் காப்பாற்ற நினைப்பவர்களையும் ‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாமல், தொடர்ந்து ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைகள் செயல்படுவதன் மூலம் தான் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். பல ஆண்டுகளாக கடத்தப்பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடத்திலே ஏற்பட்டுள்ளது. ஆகவே நேர்மையான அதிகாரிகள் பணியில் தொடரவேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படவேண்டும்” என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.