சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றுவதை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு; மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்கத் தயார்: நீதிபதிகள் பதில்

0
0

 சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, டிராபிக் ராமசாமி முறையீட்டுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக கோயில்களில் சிலைகள் திருட்டு போனது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரித்து வந்தார். அவரது அதிரடி நடவடிக்கையால் பல பத்தாண்டுகளுக்கு முன் திருடுபோன கோயில் சிலைகள் மீட்கப்பட்டன. பல வழக்குகளில் தவறு செய்த அறநிலையத்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவெடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு இது தொடர்பான அரசாணையை நேற்று வெளியிட்டது. இதை எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டித்தனர்.

சிலை கடத்தல் வழக்கில் பல்வேறு முறைகேடுகளை கால தாமதம் செய்யவே சிபிஐக்கு தமிழக அரசு மாற்றியுள்ளதாக அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முறையீடு ஒன்றை வைத்தார்.

அதில், ”சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் கிரானைட் முறைகேடு, மணல் திருட்டு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு முறைகேடுகளுக்கு சிபிஐ கேட்டும் உத்தரவிடாத தமிழக அரசு இதில் உள்நோக்கத்துடன் சிபிஐக்கு மாற்றியுள்ளது” என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

அப்போது, மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர், இதையடுத்து தனது முறையீட்டை மனுவாகத் தாக்கல் செய்வதாக டிராபிக் ராமசாமி முடிவெடுத்துள்ளார்.