சிறையில் அடைக்க நீதிபதி மறுத்த நிலையில் மேலும் ஒரு வழக்கில் திருமுருகன் காந்தி கைது

0
0

சிறையில் அடைக்க நீதிபதி மறுத்த நிலையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை போலீஸார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை தமிழர் நலன் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.  அப்போது தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் பேசியுள்ளார்.

இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு பெங்களூரு விமான நிலையத்துக்கு திரும்பிய திருமுருகன் காந்தியை விமான நிலைய போலீஸார் கைது செய்து சென்னை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை அழைத்துச் சென்றனர். 

நீதிபதி திட்டவட்டம்

தமிழக அரசுக்கு எதிராக பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வேண்டுமானால் சைபர் கிரைம் போலீஸார் 24 மணி நேரம் விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்தார். இதைத் தொடர்ந்து சைபர்கிரைம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில்,  திருமுருகன் காந்தியை போலீஸார் மேலும் ஒரு வழக்கில் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தடையை மீறி பேரணி நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் அவர் மீது போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.