‘சிறுவயதில் டி.வி.யில் கண்டுகளித்தேன்’; பிரான்ஸுக்கு எதிரான ஆட்டம் சிறப்பு வாய்ந்தது: மனம் திறக்கும் குரோஷியா வீரர் இவான் பெரிசிச்

0
0

-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரின் அரை இறுதியில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தை சிறுவனாக தொலைக்காட்சியில் கண்டுகளித்த இவான் பெரிசிச், இன்று பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் குரோஷியாவுக்காக களமிறங்குகிறார்.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் யூகோஸ்லோவியாவில் இருந்து பிரிந்த பின்னர் சுதந்திர நாடாக குரோஷியா அணி முதன்முறையாக அறிமுகமானது. அந்தத் தொடரில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. இந்தத் தொடரை தற்போது குரோஷியா அணிக்காக விளையாடி வரும் முன்னணி வீரரான இவான் பெரிசிச், தொலைக்காட்சியில் ரசிகராக கண்டுகளித்தார். அந்த ஆட்டத்தில் குரோஷியா அணி 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. பெரிசிச்சால் அப்போது கண்ணீர் மட்டுமே சிந்த முடிந்தது. பதின்ம பருவத்தில் இருந்த அவர், குரோஷியாவில் உள்ள ஹெஜ்டக் கிளப் அணிக்காக விளையாடி வந்தார். அதன் பின்னர் குடும்ப பிரச்சினைகள் காரணமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள சோச்சாக்ஸ் கிளப் அணிக்கு தாவிய நிலையில் சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே விளையாடினார்.

இதன் பின்னர் 2009-ம் ஆண்டு பெல்ஜியத்தில் உள்ள புருக்கே கிளப்புக்காவும், அதைத் தொடர்ந்து ஜெர்மனியைச் சேர்ந்த போர்ஷியா டார்ட்மண்ட் மற்றும் வொல்ப்ஸ்பர்க் கிளப் அணிகளுக்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெல்ஜியன் லீக்கில் அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த பெரிசிச், பன்டஸ்லிகா சாம்பியன் மற்றும் ஜெர்மன் கோப்பையை வென்றதிலும் முக்கிய பங்கு வகித்தார். விங்கரும், தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் நடுகள வீரருமான பெரிசிச் 2015-ம் ஆண்டு புகழ்பெற்ற இன்டர் மிலன் கிளப் அணியில் இணைந்தார். 2011-ம் ஆண்டு குரோஷியா அணிக்காக களமிறங்கிய பெரிசிச் இதுவரை 72 ஆட்டங்களில் விளையாடி 20 கோல்கள் அடித்துள்ளார்.

தற்போது குரோஷியா அணியில் மிக முக்கியமான வீராக உருவெடுத்துள்ள பெரிசிச், ரஷ்ய உலக கக் கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தார். அவர், அடித்த கோலும் அதன் பின்னர் குரோஷியா அணியின் ஒட்டுமொத்த எழுச்சியும்தான், வரலாற்றில் முதன்முறையாக அந்த அணியை இறுதிப் போட்டியில் கால்பதிக்க வைத்துள்ளது. இவான் பெரிசிச் கூறும்போது, “பிரான்ஸ் அணிக்கு எதிராக மோதுவதில் என்னை விட அதிக மகிழ்ச்சி வேறு யாருக்கும் இருக்காது. நான் தாயிடம் பேசினேன். அப்போது அவர், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியுடன் குரோஷியா மோதுவது போன்று கனவு கண்டதாக தெரிவித்தார். தற்போது அது உண்மையாகி உள்ளது” என்றார்.

1998-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3-வது இடம் பிடித்த குரோஷியா, அதன் பின்னர் பங்கேற்ற 3 தொடர்களிலும் சோபிக்கவில்லை. ஆனால் இம்முறை பெரிசிச், லுகா மோட்ரிச் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குரோஷியா அணி ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. நாக் அவுட் மற்றும் கால் இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் வரையிலும் அரை இறுதியில் கூடுதல் நேரம் வரையும் சென்று வெற்றியை வசப்படுத்தியது.

இந்த 3 ஆட்டங்களிலும் குரோஷியா பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றதுதான் கூடுதல் சிறப்பம்சம். இதுகுறித்து பெரிசிச் கூறும்போது, “குரோஷியா போன்ற ஒரு சிறிய நாட்டுக்கு அரை இறுதி ஆட்டம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிந்திருந்தோம். முந்தைய ஆட்டங்களில் பின்தங்கிய நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பதை மீண்டும் காட்டியுள்ளோம்” என்றார்.