சிறுவன் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் பாதிப்பு; கல்லீரல் ரத்தக் கசிவுக்கு நவீன சிகிச்சை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

0
0

இரண்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் கல்லீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட தருமபுரி சிறுவனுக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிறு கருவியின் உதவியுடன் நவீன அறுவை சிகிச்சை செய்து, ரத்தக் கசிவு சரிசெய்யப்பட்டது.

தருமபுரியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முருகானந்தம் (49) – தனலட்சுமி (31) தம்பதியின் மகன் உதயகுமார் (15). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறான். வீட்டின் 2-வது மாடியில் விளையாடும்போது, சிறுவன் உதயகுமார் கால் தவறி கீழே விழுந்துள்ளான்.

இதில் வயிறு மற்றும் இடுப்பின் வலது பகுதியில் படுகாயம் அடைந்த சிறுவனை, அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை சீராகி வீடு திரும்பிய சிறுவனுக்கு மீண்டும் இடுப்பு பகுதியில் அதிக வலி ஏற்பட்டுள்ளது. ரத்த வாந்தியும் எடுத்துள்ளான். இதையடுத்து சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து, சிறுவனின் கல்லீரலில் அதிகப்படியான ரத்தக் கசிவு இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, சிறுவனை சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு போதிய வசதிகள் இல்லாததால், மேல் சிகிச்சைக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

நவீன முறையில் சிகிச்சை

டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, சிறுவனின் கல்லீரலில் எந்த ரத்தக்குழாயில் கசிவு ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடித்தனர். வழக்கமாக, இதுபோன்ற பாதிப்புகளுக்கு வயிற்றை கிழித்துதான் அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், அதற்கு பதிலாக ஆன்ஜியோ எம்பொலைசேஷன் என்ற நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிலையத்தின் மற்றொரு அங்கமான இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறைத் தலைவர் ஆர்.சிவகுமார் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், சிறுவனின் வலது தொடையில் சிறு துளையிட்டனர். அங்கு உள்ள ரத்தக்குழாய் வழியாக சிறிய கருவியை உள்ளே செலுத்தி, கல்லீரலில் கசிவு ஏற்பட்டிருந்த ரத்தக்குழாயை சரிசெய்தனர்.

அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கல்லீரல் மற்றும் குடல் அறுவை சிகிச்சை துறை டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த சிறுவன், தற்போது நன்றாக நடக்கத் தொடங்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

தனியாரில் ரூ.4 லட்சம்

இந்த நவீன அறுவை சிகிச்சை குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் எஸ்.பொன்னம்பல நமசிவாயம், ஆர்எம்ஓ ரமேஷ், இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறைத் தலைவர் ஆர்.சிவகுமார், கல்லீரல், குடல் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

நாட்டிலேயே முதல்முறையாக 1994-ம் ஆண்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில்தான் நடந்தது. இங்கு இதுவரை 25 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இங்கு கடந்த 12 ஆண்டுகளாக இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி துறை செயல்படுகிறது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிறுவனுக்கு இலவசமாக செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை, தனியார் மருத்துவமனையில் செய்துகொள்ள ரூ.4 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.