சிறுமி பலாத்கார வழக்கு: உ.பி. பாஜக எம்எல்ஏ மீது குற்றச்சாட்டுகள் பதிவு

0
0

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மீது சிபிஐ நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.

பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் குல்தீப் சிங் செங்கர். இவரும், இவரது சகோதரரும் தன்னை பலாத்காரம் செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை திரும்பப் பெற வலியுறுத்தி, எம்எல்ஏவின் ஆதரவாளர்கள், அந்த சிறுமியின் தந்தையை சரமாரியாக தாக்கினர். ஆனால், அங்கு வந்த காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யாமல் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். இந்நிலையில், அவர் சிறையிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பான செய்திகள், ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது சகோதரர் அதுல் சிங் ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் (குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்புச் சட்டம்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள், குல்தீப் மீது நேற்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.