சிறுமிகள் பலாத்காரத்தால் வெட்கப்படுகிறோம்: நிதிஷ் குமார் வேதனை

0
0

பிஹார் மாநிலத்தில் நடந்த சிறுமிகள் பலாத்கார சம்பவத்தால் நாங்கள் வெட்கப்படுகிறோம். தண்டனையில் இருந்து ஒருவரும் தப்ப முடியாது என்று சிறுமிகள் பலாத்கார விவகாரத்தில் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் கலைத்துப் பேசினார்.

பிஹார் மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில், சேவாக் சங்கல்ப் இவான் விகாஷ் சமிதி சார்பில் பிரிஜேஷ் தாக்கூர் என்பவர் சிறுமிகளுக்கான காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தக் காப்பகத்தில் காது கேளாத, வாய்பேச முடியாத, மனநலம் பாதிக்கப்பட்ட 11 வயது முதல் 17 வயது வரையிலான சிறுமிகள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இவர்களுக்கு இரவு உணவில் மயக்க மருந்து கொடுத்து அந்தக் காப்பகம் நடத்துபவர்கள் பலாத்காரம் செய்து வந்தனர். சமீபத்தில் டாடா சமூக அறிவியல் நிறுவனம் இந்தக் காப்பகத்தில் ஆய்வு நடத்திய போது 15 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் அங்கிருக்கும் 42 சிறுமிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருக்கும் 42 சிறுமிகளில் 34 சிறுமிகள் மாதக்கணக்கில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதும், பலருக்கு கருக்கலைப்பு செய்திருப்பதும் மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தக் காப்பகத்தின் உரிமையாளர் பிரிஜேஷ் தாக்கூர் , ஊழியர்கள் 10 பேர் என மொத்தம் 11 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது கடந்த மாதம் 26-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோருக்குத் தொடர்பு இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கப் பரிந்துரை செய்து பிஹார் மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடங்கியதில் இருந்து எந்தவிதமான கருத்தையும் முதல்வர் நிதிஷ் குமார் வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், முதல் முறையாகத் தலைநகர் பாட்னாவில் இன்று நடந்த ஊடகங்கள் சந்திப்பில் முதல்வர் நிதிஷ் குமார் பேசினார்.

அவர் கூறுகையில், “முசாபர்பூர் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு நேர்ந்த அவலத்தை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. குற்ற உணர்வுடன் இருக்கிறோம். நான் எப்போதும் கூறுவதைத்தான் இப்போதும் கூறுகிறேன். தவறு செய்தவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

சட்டப்பேரவையில், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியபடி, இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி கடிதம் எழுதி இருக்கிறோம். உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்காமல் இருக்கும் வகையில், தடுப்பு செயல் திட்டத்தையும், செயல்முறையையும் உருவாக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கிறார்கள், தவறுசெய்யச் சிறிய வாய்ப்பு கிடைத்தால்கூட அவர்கள் தவறு செய்துவிடுகிறார்கள்” என நிதிஷ் குமார் வேதனையுடன் தெரிவித்தார்.