சிரியா கிளர்ச்சியாளர்கள் – ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தம்: மக்கள் நாடு திரும்ப அழைப்பு

0
0

அம்மான்

ரஷ்ய ராணுவத்துக்கும், சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சிரியாவின் தெற்கு மாகாணமான தாரா பகுதியில் கடந்த சில வாரங்களாக வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அப்பகுதியிலிருந்து 3.2 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். தாரா மாகாணமானது சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ளது.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து அதை நிர்வகித்து வருகின்றனர். இதே போல, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு போராடி வருகின்றனர்.

இந்த குழுக்களையும் வேட்டையாட அமெரிக்க விமானப்படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன. அவர்களது ஆதரவாக ரஷ்ய ராணுவமும் களமிறங்கியுள்ளது.

இவர்களுடன் இணைந்து சிரிய நாட்டின் ராணுவப் படைகளும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கான உத்தரவை சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே ரஷ்ய ராணுவத்துக்கும், சிரியா கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சிரிய ராணுவ செய்தித்தொடர்பாளர் இப்ராஹிம் ஜபாவி இதைத் தெரிவித்துள்ளார்.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக இடம் பெயர்ந்து வசித்து வரும் சிரிய நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு திரும்பலாம் என்று ஜபாவி தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் மூலம் ஜோர்டான், சிரியா இடையே உள்ளஎல்லைப் பகுதியை ரஷ்ய ராணுவப் போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்றும் ஜபாவி அறிவித்தார்.