சிரியாவின் தென்மேற்கு பகுதியில் கடும் வான்வழித் தாக்குதல்

0
0

சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கடும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக  போர் கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிரிய கண்காணிப்புக் குழு வியாழக்கிழமை கூறும்போது, “சிரியாவின் தென்மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள டாரா பகுதியில் சிரிய அரசுப் படைகள், ரஷ்யப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன” என்று கூறியுள்ளது.

லண்டனை தலைமையகமாகக் கொண்டுச் செயல்படும் கண்காணிப்பு குழு  கூறும்போது, “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள டாரா பகுதியில் இதுவரை சுமார் 600 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியிலிருந்து டாரா பகுதியில் தாக்குதல் நடந்ததாகவும் சுமார் 333,000 மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக சிரிய அரசுப் படைகள் கூறியுள்ளன.

சிரியா போர்

சிரியாவில் ஷியா பிரிவைச் சேர்ந்த அதிபர் ஆசாத்துக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது.  அதிபர் ஆசாத்துக்கு உதவியாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும்,  ரசாயன ஆயுதங்களை அழிப்பதற்காக, அமெரிக்க ராணுவத்தினர் கடந்த 3 மாதங்களாக அங்கு முகாமிட்டுள்ளனர். மேலும், அந்நாட்டில் உள்ள ரசாயன ஆலைகள், ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீதும் அமெரிக்கப் படையினர் அவ்வப் போது வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது.