சி(ரி)த்ராலயா 26: கதிகலங்க வைத்த கல்கத்தா பயணம்!

0
0

முழுநேர சினிமா எழுத்தாளர் ஆகிவிட்ட கோபுவை மீண்டும் நாடகம் எழுத வைத்துவிட்டார் நடிகர் திலகம். ‘கலாட்டா கல்யாணம்’ நாடகத்தை சிவாஜி கணேசன் படமாக்க முடிவு செய்து சி.வி.ராஜேந்திரனை இயக்குநராக அமர்த்தி ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். அப்போது, குருதத் கதாநாயகனாக நடிக்கும் படம், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா’ என இந்தியில் இரண்டு படங்களை ஸ்ரீதர் இயக்கிக்கொண்டிருந்தார்.

இந்த வேலைகளுக்காக அன்றாடம் பம்பாய்க்கும் சென்னைக்குமாகப் பறந்துகொண்டிருந்தார் கோபு. ஒரு கட்டத்தில் விமானப் பயணம் என்றாலே கோபுவுக்கு அலர்ஜியாகிவிட்டது. காரணம், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் இந்தி மறு ஆக்கமான ‘தில் ஏக் மந்திர்’ படத்தின் நூறாவது நாள் விழாவுக்காக, ‘சித்ராலயா’ டீம் மொத்தமும் கல்கத்தா சென்றபோது சந்தித்த திகில் அனுபவம்தான். ஸ்ரீதர், கோபு, வின்சென்ட், பி.என் சுந்தரம், திருச்சி அருணாசலம், கங்கா, எடிட்டர் ஷங்கர், சி. வி ராஜேந்திரன் உட்பட ‘ஸ்கை மாஸ்டர்’ என்ற விமானத்தில் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குச் சென்று பறந்துகொண்டிருந்தனர்.

இன்னும் பத்து நிமிட நேரத்தில் கல்கத்தாவில் தரையிறங்கிவிடலாம் என்ற நிலையில் திடீரென்று அதலபாதாளத்தில் விழுவதுபோல் பெரிய உலுக்கலுடன் சுமார் பத்து நொடிகள் விமானம் தலைகுப்புற கீழே வந்து பின் மேலே நிமிர்ந்து பறக்கத் தொடங்கியது. விமானத்தில் இருந்த அனைவரும் கலவரத்துடன் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினார்கள். கோபுவோ அலறினார். காரணம் அவருக்கு நெஞ்சை அடைத்தது. ‘தில் ஏக் மந்திர்’ படத்தில் நெஞ்சைப் பிடித்துக்கொள்ளும் ராம் கதாபாத்திரம் கோபுவின் நினைவுக்கு வந்துபோனது.

பிரிட்டிஷ் பயணியின் பிரார்த்தனை!

கோபுவின் பக்கத்தில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி ஒருவர் கோபுவைச் சமாதானம் செய்தார். “சில சமயங்களில் காற்று இல்லாத இடங்களில் ‘ஏர் பாக்கெட்ஸ்’ உருவாகிவிடும். அதுபோன்ற இடங்களில் பறக்கும்போது விமானம் கீழே தொப்பென்று இறங்கும். ஆனால், மறுபடியும் விமானி அதை மேலே கொண்டு வந்துவிடுவார்” என்று விளக்கினார் அந்த வெள்ளைக்காரர். ஆனால், இருபது முறைக்கும் மேலாக இப்படிக் கீழே இறங்குவதும் பின் தட்டுத் தடுமாறி மேலேறிப் பறப்பதுமாக அந்த விமானம் அசாதாரணமாகப் பறக்கத் தொடங்கியதும் விளக்கம் கொடுத்த வெள்ளைக்காரருக்கே வியர்க்கத் தொடங்கிவிட்டது. கோபுவின் கையைக் கெட்டியாகப் பிடித்து கொண்டு பிரார்த்தனையை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டார்.

சென்னையில் தொடங்கி அவ்வளவு அழகாகச் சிரித்துக்கொண்டும் கண்களில் தேவதைகளுக்கான அன்பைத் தேக்கி வைத்தபடி பயணிகளுக்கு பணிவிடைகள் செய்துகொண்டிருந்த விமானப் பணிப்பெண்களே விசும்பத் தொடங்கிவிட்டார்கள். ஹாண்ட் லக்கேஜ்கள் இங்கும் அங்குமாக விமானம் முழுவதும் சிதறிப் பறந்தன. விழுந்த பைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அருகில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டார்கள்.

ஸ்ரீதர் “ பாலாஜி… பாலாஜி ” என்று திருப்பதி பெருமாளை அழைக்கத் தொடங்கிவிட்டார். ஒளிப்பதிவாளர் வின்சென்ட் “ஆண்டவரே… இரக்கமாயிருக்கும் கிறிஸ்துவே இரக்கமாயிருக்கும்… மரியே வாழ்க” என்று கூறி பிதா, சுதன், தூய ஆவி சின்னத்தை நெஞ்சில் வரைந்துகொண்டே இருந்தார். கோபுவின் அருகில் அமர்ந்திருந்த பிரிட்டிஷ் பயணி, அவசரமாகத் தனது மேல்கோட்டைக் கழற்றினார். ‘சரிதான்… இவருக்கு விமானம் தொடர்பாக ஏதோ விஷயம் தெரியும் போலும். காக்பிட் சென்று விமானிகளுக்கு யோசனை சொல்லப் போகிறார் என்று கோபு அவரை நம்பிக்கையுடன் பார்த்தார்.

யூ ஆர் கிரேட்!

அந்தப் பயணியோ அவிழ்த்த தனது கோட்டை ஒரு பாத்திரம்போல் சுருட்டி அதில் வாந்தி எடுக்கத் தொடங்கிவிட்டார். மற்றவர்கள் மேல் வாந்தி எடுத்துவிடக் கூடாது என்ற அவரது இங்கிதத்தை கோபுவால் அந்த நேரத்திலும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவரைப் பார்த்து “ யூ ஆர் ரியலி கிரேட்!” என்றார். அந்த நேரம் பார்த்து விமானம் மீண்டும் பல்டி அடிப்பதுபோல் திடீரென்று தாழ, “ ந்நோஓஓ… வி ஆர் கோயிங் டூ டெட்” என்று கத்திக்கொண்டே மூன்றாம் முறையாக வாந்தி எடுத்தார்.

ஒளிப்பதிவாளர் வின்சென்ட் உடன் கோபு

 

உயிர் அந்தரத்தில் ஊசலாடும் நிலையிலும் கோபுவுக்கு நகைச்சுவை உணர்வே ரத்தத்தில் பீறிட்டுக்கொண்டு இருந்தது. அந்த இக்கட்டான நேரத்தில், ஆபத்தில் உயிர் பிழைக்க சிறுவயதில் தனக்கு அம்மா சொல்லித் தந்த சுலோகத்தைச் சொல்லலாம் என்று தனது மூளையை அதட்டி அதை நினைவுபடுத்தக் கூறினார். ஆனால், மூளை அடம் பிடித்தது. இதற்குமேலும் பிரார்த்தனை செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்த கோபு, திருவல்லிக்கேணி மீசைக்காரப் பெருமாளை நினைத்துக்கொண்டே இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்தார்.

துப்பாக்கி முனையில் விமானம்

சுமார் முப்பது முறை அந்த விமானம் இறங்கியும் ஏறியும் பயணிகளை வாட்டி வதைத்தபின் அதிகம் வெளிச்சம் இல்லாத ஒரு இருட்டு ரன் வேயில் ஓடி நின்றது. பாதிப் பயணிகளுக்குமேல் உயிர்பிழைத்த அதிசயத்தை நினைத்து சின்னக் குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார்கள். “ எல்லோரும் கீழே இறங்கி கொஞ்சம் வெளிக்காற்றைச் சுவாசித்துவிட்டு வரலாம்” என விமானி மைக்கில் சொல்ல, அனைவரும் இறங்கினர். கோபு தனது அணியில் முதல் ஆளாகத் தப்பிப்பதுபோல் நினைத்து ஓடினார். ஆனால், அவருக்கு முன்பே ஸ்ரீதர் இறங்கியிருந்தார். ஆனால், இறங்கிய அனைவருக்கும் அதிர்ச்சி.

அந்த விமானத்தையும், இறங்கிய பயணிகளையும் சுற்றி சுமார் ஐம்பது ராணுவ வீரர்கள் துப்பாக்கியோடு நின்றுகொண்டிருந்தார்கள். வேறு ஒன்றுமில்லை, கல்கத்தாவில் இறங்குவதற்கு முன், திடீரென்று வீசிய சூறைக் காற்றில் சிக்கியிருக்கிறது விமானம். அதைக் கடந்து விடலாம் என்று நினைத்திருக்கிறார் விமானி. ஆனால், காற்றின் வேகத்துக்கு முன்னால் அந்த அலுமினியப் பறவையால் ஆட்டம் காட்ட முடியாத நிலையில் காற்று வீசிய திசையிலேயே பயணித்து, ‘சானிகொண்டா’ என்ற ராணுவ விமான தளத்தில் இறங்கிவிட்டது. அனுமதியற்ற லேண்டிங். அதுவும் விமானத் தளத்தில். மீண்டும் கிளம்பத் தயாரானது. “இன்னும் இருபது நிமிடத்தில் கல்கத்தா போய்விடலாம் அனைவரும் ஏறுங்கள் ” என்று விமானி சொன்னதும் திருச்சி அருணாசலத்தின் முகம் பேயறைந்தது போல் மாறியது.

“ஐயோ… திரும்பவும் இதே விமானமா… வேணவே…வேணாம்..! எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் என்றாலும் கால்நடையாவே ஊருக்குப் போயிடுறேன்… ஆளை விடுங்க” என்று கெஞ்சினார். ஆனால், அங்கிருந்த ராணுவப் பிரிவு யாரையும் அனுமதிக்கவில்லை. வேறு வழியின்றி அனைவரும் அதே விமானத்தில் ஏறினார்கள். கோபு ஸ்ரீதரின் பக்கம் திரும்பி, “ ஸ்ரீ! இனி இந்திப்படம் வேணவே வேணாம். ஒழுங்கா தமிழ் படம் எடுத்து செங்கல்பட்டுல ரிலீஸ் பண்ணிட்டா காஞ்சிபுரத்துல பாராட்டு விழா எடுப்பாங்க. இந்த டென்ஷன் எனக்கு ஆகாதுப்பா!” என்றார்.

இப்படிச் சொன்ன கோபு அடுத்த சில மாதங்கள் விமானப் பயணத்தைத் தவிர்த்தாலும் பின்னர், ‘சிவந்த மண்’ படப்பிடிப்புக்காக, பாரீஸ், ரோம், அமெரிக்கா, ஸ்பெயின், எகிப்து, கிரீஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பறந்து பறந்து படமெடுத்தார்.

(சிரிப்பு தொடரும்)