சிம்பு – வெங்கட்பிரபு படத்தின் தலைப்பு: திங்கட்கிழமை அதிகாரபூர்வ அறிவிப்பு

0
11

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்க இருக்கும் படத்தின் தலைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியாக இருக்கிறது.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, ஜோதிகா, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் என மல்ட்டி ஸ்டாரர் படமாக இது உருவாகியுள்ளது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் சிம்பு. தற்போது ‘பார்ட்டி’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் வெங்கட் பிரபு, அந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு சிம்பு படத்தைத் தொடங்குகிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

சிம்பு – வெங்கட் பிரபு இணையும் படத்தின் தலைப்பு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு, வருகிற திங்கட்கிழமை (ஜூலை 9) வெளியாக இருக்கிறது. ஆனால், இந்தப் படத்துக்கு ‘அதிரடி’ எனத் தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதுதான் தலைப்பு என நமக்கும் உறுதியான தகவல் கிடைத்தது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. பிறகு, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார் என்றார்கள். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கட்பிரபு, ‘நான் தற்போது ‘பார்ட்டி’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். சிம்பு படத்தின் கதையை இன்னும் எழுதி முடிக்கவில்லை. கதையை முடித்தபிறகே நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களை முடிவுசெய்ய முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.