சிந்தாதிரிப்பேட்டையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டம்

0
0

சிந்தாதிரிப்பேட்டையில் புதிய டாஸ் மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் போராட் டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிட்டது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சுவாமி நாயக்கன் தெருவில் புதிய டாஸ்மாக் கடையை திறக்க அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்zபை மீறி கடையை திறக்க மதுபாட்டில்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று மதியம் 12 மணிக்கு கடையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையறிந்து புதிய டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காலை 10.30 மணிக்கு திரண்டனர். அதிமுக, திமுக, பாஜகவைச் சேர்ந்தவர்களும் தங்களது கட்சியின் கொடியுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 30 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடை முன் அமர்ந்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அரசு உயர் அதிகாரிகளும் விரைந்தனர்.

போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.