சர்வதேச முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர் சங்கத் தலைவராக கோவையை சேர்ந்த டாக்டர் ராஜசேகரன் தேர்வு: ஆசியாவில் இருந்து பொறுப்பேற்கும் முதல் நபர்

0
0

சர்வதேச முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்க (ஏ.ஓ.ஸ்பைன்) தலைவராக, கோவை கங்கா மருத்துவ மனையின் எலும்பு முறிவு மற்றும் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் பொறுப்பேற்கிறார்.

இந்த சங்கத்துக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறையாகும்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பாசெல் நகரில் இன்று (ஜூலை 13) நடைபெறும் சங்கத்தின் ஆண்டு மாநாட்டில், டாக்டர் எஸ்.ராஜேசகரன், நியூயார்க் நகரைச் சேர்ந்த டான் ரியூவிடம் இருந்து பொறுப்புகளைப் பெற்றுக் கொள்கிறார்.

இவர் 2021 வரை 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார். முதுகு தண்டுவடம் தொடர் பான கல்வி மற்றும் ஆராய்ச்சி களில், சர்வதேச அளவிலான நிபுணர்களுக்கு டாக்டர் ராஜசேகரன் வழிகாட்டுவார்.

இந்தியாவுக்கு பெருமை

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற இந்த சங்கத்தில், 8,000-க்கும் மேற்பட்ட, உலகப் புகழ் பெற்ற முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி மற்றும் நவீன ஆராய்ச்சிகளின் மூலம் சிறந்த சிகிச்சை அளிப்பது, நிபுணர்களின் அறிவுத் திறனை உயர்த்துவது, சர்வதேச அளவில் உள்ள நிபுணர்களின் கல்வி, அனுபவத்தை அனை வருக்கும் கிடைக்கச் செய்வது, நோய்த் தொற்று, முதுகு தண்டுவட காயம், கட்டிகளை நவீன சிகிச்சை மூலம் தீர்க்க உதவுவது ஆகியவையே இந்த சங்கத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

ஏற்கெனவே இந்த சங்கத்துக்கு வட அமெரிக்கா, ஐரோப் பிய நாடுகளில் இருந்து தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஆசிய கண்டத்தில் இருந்து முதல் முறையாக டாக்டர் ராஜசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதாகும்.

2 பெரிய திட்டங்கள்

இதுகுறித்து டாக்டர் எஸ்.ராஜசேகரன் தெரிவித்ததாவது:

வரும் 3 ஆண்டுகளில் 2 பெரிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளோம். முதல் திட்டத்தின் மூலம் ‘மருத்துவ நடைமுறை மையங்கள்’ அமைத்து, உலக அளவில் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நிபுணர்களை இணைத்து, தரம் வாய்ந்த சிகிச்சை முறையை வரை முறைப்படுத்தி, நவீன சிகிச்சை முறைகளை தேர்வு செய்து, தேவையான வழிகாட்டுதலுடன் அதை உலகம் முழுவதும் அறி முகப்படுத்துவதாகும். இதன் மூலம் பலவித நோய்களுக்கான முதுகு தண்டுவட சிகிச்சை முறை யில் தற்போது உண்டாகும் சர்ச்சைகளை தவிர்ப்பதுடன், நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சை முறையை உலகளவில் மேம்படுத்தலாம்.

இரண்டாவது திட்டம் ‘முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை பட்டயத் தேர்வை’ உலக அளவில் நடத்துவதாகும். உரிய பயிற்சி இல்லாமலும், தக்க மதிப்பீடு இல்லாமலும், உலகில் 70 சதவீத நாடுகளில் முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை நடைபெற்று வருகிறது. இதை கண்காணித்து, தரமான பயிற்சி அளித்து, அனைத்து நாடுகளிலும் தரமிக்க சிகிச்சை முறையை கொண்டுவருவதே இதன் நோக்கமாகும்.

இவ்விரு திட்டங்களையும் திறம்படச் செயல்படுத்துவது, உலக முதுகு தண்டுவட அறுவைசிகிச்சை முறைக்கு பெரும் வளர்ச்சியைத் தரும். இவ்வாறு டாக்டர் ராஜசேகரன் தெரிவித்தார்.