‘சர்கார்’ பட போஸ்டரில் புகைபிடிக்கும் காட்சி; நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

0
0

 ‘சர்கார்’ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி புகையிலை சட்டத்தை மீறியதாக, நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு தமிழக பொது சுகாதாரதுறை எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சியை ‘சர்கார்’ படத்தில் இருந்தும், இணையதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புகைப்பொருட்களையும் புகை பழக்கத்தையும் மறைமுகமாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ‘சர்கார்’ படத்தின் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் வாயில் சிகரெட் பிடித்தபடி உள்ள நடிகர் விஜய்யின் படத்தை இணையதளங்களில் இருந்தும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் இல்லையேல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புகைபழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல் கட்ட முயற்சிகளுக்கு திரை உலகினர் ஒத்துழைக்க வேண்டும்.

திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தும் இந்திய அரசு அரசாணை 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த அரசாணையின் பிரிவு 9(2) திரைப்பட விளம்பரங்களில் எந்தவிதமான புகையிலைப் பொருளும் இடம்பெறக் கூடாது, புகைபிடிக்கும் காட்சிகளும் இடம் பெறக் கூடாது என அனைத்து விதமான புகையிலை விளம்பரங்களுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ள ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (First Look) விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதன் மூலம் 2003 இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி லட்சக்கணக்கான இளைஞர்களைச் சென்றடைந்துள்ளது. தமிழக ரசிகர்கள் செல்போன் கவர்கள், பனியன்கள், கேக்குகள், பேனர்கள், சுவர் விளம்பரங்கள், தங்கள் வாகனத்தின் மீது அந்தப் போஸ்டரை ஒட்டிவைப்பது, பேட்ஜ்கள், பிளக்ஸ்கள் என அனைத்து வகைகளிலும் இந்தப் போஸ்டரை பயன்படுத்துகின்றனர்.

இந்தப் படத்தின் போஸ்டர்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகப் பரவியுள்ளது. சட்டவிதிகளைக் குறிப்பிட்டு இணையதளங்களில், யூடியூப்களில் மேற்கண்ட போஸ்டர்களை நீக்குவதன் மூலம் இவைகள் இளைஞர்கள் மனதில் ஏற்படுத்திய பாதிப்புகளை மாற்றிவிடப்போவதில்லை. இளைஞர்கள் மத்தியில் போஸ்டர் உருவாக்கிய ஆர்வத்தை அது குறைக்காது.

இச்சட்டத்தின் பிரிவு 5-ன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு மேற்படி சட்டத்தின் பிரிவு 22-ன் கீழ் இரண்டு ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை கடுமையாகப் பிரயோகிக்க தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும். ஆகவே இதை உணர்ந்து தமிழ்த் திரையுலகினர் மேற்கண்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.