‘சர்கார்’ சர்ச்சை: விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதி மாறன் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

0
0

‘சர்கார்’ படத்தில் புகைபிடிக்கும் சர்ச்சை குறித்து இரண்டு வாரங்களுக்குள் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதி மாறன் விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துவரும் இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21-ம் தேதி மாலை ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில், விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தப் புகைப்படத்துக்கு, சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.

குறிப்பாக, முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். தான் மத்திய அமைச்சராக இருந்தபோது, ‘இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என 2007-ம் ஆண்டு விஜய் தனக்கு கொடுத்த வாக்குறுதியையும் நினைவூட்டினார் அன்புமணி ராமதாஸ்.

இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காட்சியை நீக்குமாறு விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று, அந்த போஸ்டரை தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கியது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்நாடு புகையிலைப் பொருட்களுக்கு எதிரான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலெக்ஸாண்டர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ‘புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் வரை மரணம் அடைகின்றனர். 2011-ம் ஆண்டு சட்டத்தின்படி புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீக்கப்பட்ட போஸ்டர்

 

ஆனால், ‘சர்கார்’ போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இது புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்த ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் விளம்பரத் தடை மற்றும் ஒழுங்குமுறை தடுப்புச் சட்டத்தின்படி, இந்தக் காட்சியை படத்தில் இருந்து நீக்க வேண்டும்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் கிசிச்சைப் பிரிவுக்காக பொது நிதியம் ஒன்றை ஏற்படுத்தி, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதி மாறன் ஆகிய மூவரும் தலா 10 கோடி ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் ஆகிய மூவரும் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.