‘சர்கார்’ ஓப்பனிங் பாடலுக்கு நடனமாடும் விஜய்: லீக்கான வீடியோ

0
1

‘சர்கார்’ ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் லீக்கானது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் இது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் ஓப்பனிங் பாடலை அங்கு படமாக்கி வருகின்றனர். நடன இயக்குநர் ஷோபி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை முன்னிட்டு இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷூட்டிங், மீண்டும் நேற்று தொடங்கியது. நடனக் குழுவினருடன் விஜய் எடுத்துக் கொண்ட புகைப்படம், செல்ஃபி போன்றவை சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், ஓப்பனிங் பாடலுக்கு விஜய் நடனமாடும் வீடியோவும் சமூக வலைதளங்களில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்த யாரோ ஒருவர் படப்பிடிப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். நடனக்குழுவுக்குப் பின்னால் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பதால், விஜய்யின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.