சத்துணவு முட்டைக்கான பழைய ஒப்பந்தம் விரைவில் முடிவடைகிறது; புதிய டெண்டரில் 6 நிறுவன விண்ணப்பம் நிராகரிப்பு: மாற்று ஏற்பாட்டுக்கான முயற்சிகள் தீவிரம்

0
0

சத்துணவு முட்டை வழங்குவதற்கான புதிய டெண்டரில் பங்கேற்ற 6 நிறுவனங்களின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் களுக்கு அடுத்த மாதம் முட்டை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களும் கலவை சாதத்துடன், முட்டை வழங்கப்படுகிறது.

இதற்காக ஆண்டுக்கு ரூ.500 கோடியில் 1 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே முட்டையை வழங்கி வரும் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் இம்மாதம் முடிகிறது. எனவே, புதிய ஒப்பந்தத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கடந்த ஜூன் 10-ம் தேதி கோரப்பட்டு, நேற்று முன்தினம் ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையில், தமிழக அரசுக்கு முட்டை வழங்கி வரும் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. இந்த சூழலில், அந்த நிறுவனத்தின் 3 துணை நிறுவனங்களும் இதில் பங்கேற்றன. இதுதவிர ஆந்திராவைச் சேர்ந்த 2 நிறுவனங்கள், நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு நிறுவனம் என மொத் தம் 6 நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த ஒப்பந்தப் புள்ளிகளை ஆய்வு செய்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள், ஆவணக் குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை நிராகரித்துவிட்டனர். கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஒப்பந்தம் இம்மாதத்துடன் முடிவடையும் நிலையில், புதிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டதால், அடுத்த மாதம் பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இதுகுறித்து அரசுத் துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘‘ரூ.2 கோடிக்கு மேலான ஒப்பந்தங்களுக்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். மாநில அளவில் புதிய ஒப்பந்தம் கோர அவகாசம் இல்லை. எனவே, அரசின் அனுமதி பெற்று குறைந்த காலத்தில் புதிய ஒப்பந்தம் கோரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை முடியாமல் போனால், குறுகிய கால ஒப்பந்தம் மூலம் வேறு யாரிடமாவது முட்டையை கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவர்களுக்கு முட்டை வழங்குவது பாதிக்கப்படாது எனக் கருதுகிறோம்’’ என்றனர்.