சத்துணவு பொருள் நிறுவனத்தில் 4-ம் நாளாக வருமான வரி சோதனை: ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்கம் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

0
0

அரசின் சத்துணவு திட்டத்துக்கான பொருட்களை விநியோகம் செய்து வரும் நிறுவனத்தின் அலுவலகங்கள், வீடுகளில் வருமானவரித் துறை மேற்கொண்ட சோதனையில் ரூ.17 கோடி பணம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள ஆண்டிபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்டி ஃப்ரைடுகிராம் இண்டஸ்ட்ரி நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. போலியான பெயர்களில் பல நிறுவனங்களை உருவாக்கி, தனியாரிடம் இருந்து பொருட்களை வாங்கி போலியாக கணக்கு தாக்கல் செய்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அந் நிறுவனம் மீது புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அக்னி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் வட்டூரில் உள்ள நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமி வீடு, நிறுவன ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள், உறவினர் வீடு மற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி தொடங்கிய சோதனை 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுள்ள இந்த சோதனையில், இதுவரை ரூ.17 கோடி வரை பணம், 10 கிலோ தங்க நகைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல சொத்து ஆவணங்கள் சந்தேகத்துக்குரிய பினாமிகளின் பெயர்களில் உள்ளதாகவும், குறிப்பிட்ட அளவு வெளிநாட்டு பணம் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது.

சிக்கிய பென் டிரைவ்கள்

இவை தவிர மடிக்கணினிகள், தகவல் சேமிப்பு சாதனங்களும் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்களை வைத்து அடுத்தகட்ட விசாரணைகள், சோதனைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு நிறுவன ஊழியர் கார்த்திகேயன் என்பவரிடம் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது மயக்கம் வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியே வந்த அவர், முதல் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றார். இதில், முதுகு தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கார்த்திகேயனிடம் இருந்து ஏராளமான பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.

முன்னதாக சோதனையின்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் சுகாதேவியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.