சத்துணவு திட்டத்துக்கு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் 2-வது நாளாக தொடர் சோதனை: சென்னையில் ரூ.4 கோடி ரொக்கம், ஆவணங்கள் பறிமுதல்?

0
0

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு போன்ற பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனத்தின் அலுவலகங்கள், குடோன், உரிமையாளர் வீடு உட்பட தமிழகம் முழுவதும் 76 இடங்களில் 500-க்கும் அதிகமான வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். நேற்று இரண்டாவது நாளாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனம் உள்ளது. கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக நேற்று முன்தினம் அதிகாலை முதல் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனம், வட்டூர் பிரிவு சாலையில் உள்ள நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமி வீடு, கூட்டப்பள்ளி காலனியில் உள்ள நிறுவனத்தின் ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் அலுவலகம் மற்றும் அவர்களது வீடு மற்றும் தொண்டிக்கரடு, விட்டம்பாளையம் பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகள் என நாமக்கல் மாவட்டத்தில் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் உள்ள நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்வதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊழியர் தப்ப முயற்சி

கிறிஸ்டி நிறுவனத்தில் பணி புரியும் திருச்செங்கோடு தோக்கவாடியைச் சேர்ந்த பி. கார்த்திகேயன் (32) என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது மயக்கம் வருவதாகக் கூறி விட்டு வெளியே வந்த அவர் தப்ப முயன்றார். அப்போது மாடியில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு முதுகெலும்பு முறிந்தது.

சென்னையில்…

சென்னையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநரும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுதாதேவியின் நெற்குன்றத்தில் உள்ள வீட்டில் நேற்று 2-வது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் 16-வது மாடியில் இந்த சோதனை நடந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள மேலும் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாகவும் சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம், போலி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது உறுதி செய்ய மறுத்து விட்டனர்.