சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தபடி பிளாஸ்டிக் பயன்படுத்த தடை அரசாணை வெளியானது: ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகிறது

0
9

தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்படும் என சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 5-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதற் கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பும் உடல்நலக் குறைவும் ஏற்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பைகள், உணவை பாதுகாக்கவும் மேசை கள் மீது போடவும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ் டிக் பூச்சு கொண்ட டீ கப்புகள், பிளாஸ்டிக் தம்ளர், குடிநீர் பாக்கெட்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் ஆகியவை சுற்றுச் சூழலுக்கும் மனித உடல் நலத்துக்கும் மட்டுமல்லாது தாவரங்கள், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிப்பதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளையும் மாசுபடுத்துகிறது. இதை தடுக் கும் விதமாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகி றது.

எனவே, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும் வைத்திருக்கவும் விநியோகிக்கவும் எடுத்துச் செல்ல வும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அவற்றை கடைக்காரர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்தவும் தடை விதிக்கப் படுகிறது.

ஏற்றுமதிக்காக பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கவும் வனம் மற்றும் தோட்டக்கலைத் துறை பயன்பாட்டுக்கும் பால் பொருட்கள், மருத்துவப் பொருட்களை அடைத்து விற்கவும் மக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கவும் விலக்கு அளிக்கப் படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.