சட்டப்பேரவையில் இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாக வாய்ப்பு

0
0

தமிழகத்தில் லோக்ஆயுக்தாவை கொண்டு வருவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இதில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரலில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ‘லோக் ஆயுக்தா, லோக்பால் தொடர்பாக மத்திய அரசு சில சட்டத் திருத்தங்கள் கொண்டுவர உள்ளதால், அதைத் தொடர்ந்து லோக் ஆயுக்தா அமைக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக லோக் ஆயுக்தாவை அமைக்க உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக தலைமைச் செயலருக்கு உத்தர விட்டது.

உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிய 5 நாட்களே உள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கி யுள்ளது.

2 நாட்கள் மட்டுமே அவகாசம்

லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இன்று மற்றும் 9-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மட்டுமே பேரவை கூட்டம் நடக்கும் என்பதால், இந்த 2 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது.

இதற்கிடையில், கடந்த 3-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனவே, பேரவையில் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது.