சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்

0
0

மாநிலங்களவை நியமன எம்.பி.க்களாக இருந்து வந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து அந்த இடங்களுக்கு நாட்டிய கலைஞர் சோனால் மான்சிங் உள்ளிட்டோரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநிலங்களவையில் பல்வேறு துறை சார்ந்த அறிஞர்கள், சாதனையாளர்களை 12 பேரை எம்.பி.க்களாக குடியரசு தலைவர் நியமித்து வருகிறார். மாநிலங்களவை எம்.பி.க்களாக நியமிக்கப்பட்ட சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஆஹா, பராசரன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது.

இதனையடுத்து, அந்த இடங்களுக்கு புதிய நபர்கள் எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, விவசாய சங்க தலைவர் ராம் ஷெகால், சிற்ப கலைஞர் ரகுநாத் மொஹாபத்ரா, எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, நாட்டிய கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை எம்.பி.க்களாக நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இவர்களை தவிர, மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், எழுத்தாளர் ஸ்வபன்தாஸ் குப்தா, வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி, பொருளாதார அறிஞர் நரேந்திர ஜாதவ், நடிகை ரூபா கங்குலி, மலையாள நடிகர் சுரேஷ் கோபி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சாம்பாஜி சத்திரபதி ஆகியோர் தற்போது பதவி வகித்து வருகின்றனர்.