சக சிறைவாசியால் சுட்டுக்கொல்லப்பட்ட தாதா பஜ்ரங்கி: விசாரணையில் புதிய தகவல்கள்

0
0

தாதா பிரேம் பிரகாஷ் (என்கிற) முன்னா பஜ்ரங்கி, பாக்பத் மாவட்ட சிறைச்சாலையில் சக சிறைவாசியால் கொல்லப்பட்டார் எனவும் அவர் ஏழுமுறை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் இன்று போலீஸார் தெரிவித்தனர்.

முன்னா பஜ்ரங்கி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். 2015ல் நடைபெற்ற அரசியல் மோதலில் 7  பேர் கொல்லப்பட்டபோது இவருடைய பெயர் மாநிலம் முழுவதும் பரவியது. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் வெளிவந்து  சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டார்.

தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் சிறைக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்ட இவர் இந்தமுறை இவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று இவரது மனைவி தெரிவித்தார்.  காவலர்களின் என்கவுண்ட்டர் பட்டியலில் தனது கணவர் பெயர் இருப்பதால் அவருக்கு பாதுகாப்புத்தரவேண்டுமென்றும் கோரியிருந்தார்.

இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் திங்கள் அன்று பாக்பத் சிறை வளாகத்திலேயே பஜ்ரங்கி சுட்டுக்கொல்லப்பட்டார்.

பஜ்ரங்கி, சக சிறைவாசி சுனில் ராதி என்பவரால் ஏழுமுறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் ஜெய்பிரகாஷ் இன்று தெரிவித்தார். ஒரு குண்டு தலையை துளைத்ததால் தலையின் ஒரு பகுதி மோசமாக சேதமடைந்தது.

ஒரு பிஸ்டல், குண்டுகள் சிறை வளாகத்தின் வடிகால் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிறைக்குள் துப்பாக்கி எப்படி வந்தது என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. இதுகுறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சுபாரி எனப்படும் ஒப்பந்தக் கொலை தொடர்பாக ராதியுடன் பஜ்ரங்கி விவாதம் செய்ததாக தெரிகிறது. அதன்பின்னர் ராதி, பஜ்ரங்கியை கொன்றுள்ளார். இத்தகவல் மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. யாரைக் கொலை செய்வதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் பற்றிய விவாதம் இது? யார் பின்னால் இருக்கிறார்கள்? என்பது பற்றியெல்லாம் இன்னும் விரிவாக விசாரணை செய்யவேண்டியுள்ளது.

மாஃபியா தாதா பஜ்ரங்கி இந்த வாரம் தொடக்கத்தில் திங்கள் அன்று சிறை வளாகத்திலேயே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பாக பிஎஸ்பி எம்எல்ஏவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருந்தார்.