கோவை – சேலம் இடையே நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம்: பயணக் கட்டணம் ரூ.155

0
0

கோவை மண்டலத்தில் முதல் முறையாக கோவையில் இருந்து சேலத்துக்கு நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம் நேற்று தொடங்கியது.

தமிழகத்தின் 2-வது பெரிய தொழில் நகரமான கோவையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான பேருந்துகளுடன், ஒன் டூ ஒன் எனப்படும் இடைநில்லா பேருந்துகளும் செல்கின்றன.

இந்நிலையில், கோவை மண்டலத்தில் முதல் முறையாக கோவையில் இருந்து சேலத்துக்கு நடத்துநர் இல்லாத பேருந்து இயக்கம் நேற்று தொடங்கியது. கோவை காந்திபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் புறப்படும் அரசுப் பேருந்து வேறு எங்கும் நிற்காமல் சேலத்தைச் சென்றடையும். பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்தவுடன், பேருந்தில் இருந்து நடத்துநர் கீழே இறங்கிவிடுவார். ஓட்டுநருடன் அந்தப் பேருந்து சேலம் செல்லும்.

இதுகுறித்து கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

முதல்கட்டமாக 6 பேருந்துகள், தலா 4 முறை கோவையில் இருந்து சேலம் சென்று வரும். ஏற்கெனவே ஒன் டூ ஒன் பேருந்துக் கட்டணமான ரூ.155, நடத்துநர் இல்லாத பேருந்துக்கும் வசூலிக்கப்படும். பயண நேரமும் இன்னும் கொஞ்சம் குறையும்.

இதேபோல, திருச்சி, மதுரை, பழனி உள்ளிட்ட ஊர்களுக்கும் இதேபோன்ற பேருந்தை இயக்கத் திட்டமிட்டுள்ளோம். சுமார் 90 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

ஒருவேளை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதுமான பயணிகள் ஏறாவிட்டால், அதற்கடுத்த ஒன்றிரண்டு பேருந்து நிறுத்தங்களில் மட்டும் இந்தப் பேருந்தை நிறுத்தலாம். அதுவரை நடத்துநர் பேருந்தில் செல்வார். எனினும், இந்த முடிவு தேவையைப் பொறுத்தே அமையும். விரைவான பயணத்தை நோக்கமாகக் கொண்டே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.