கோவை கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழப்பு; பயிற்சியை நாங்கள் நடத்தவில்லை: கைவிரித்தது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்

0
0

 கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில் உயிரிழந்த மாணவிக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை, ஆணையம் தாங்கள் அந்த பயிற்சியை நடத்தவில்லை, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கைவிரித்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை தனியார் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (19). இவர் வாளையார் சாலையில் நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்தார்.

இந்நிலையில் அந்தக் கல்லூரியில் நேற்று பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்தது. பேரிடர் காலங்களில் எவ்வாறு தப்பிக்க வேண்டும் என்பது குறித்து நேற்று மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பூகம்பம் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது, கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது குறித்து விளக்கப்பட்டது.

2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே குதிக்கவும், அவர்களை வலை மூலம் பிடித்து காப்பாற்றவும் மாதிரி பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. 2-வது மாடியில் இருந்து மாணவிகள் கீழே ஒவ்வொருவராக குதித்தனர். கீழே விரிக்கப்பட்ட வலையில் அவர்கள் ஒவ்வொருவராக குதித்தனர்.

அப்போது மாணவி லோகேஸ்வரி கீழே குதிக்கும் போது தலை சன்ஷேடில் மோதி விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முறையான பயிற்சி இல்லாத ஒருவரை கொண்டு தேசிய பேரிடர் மேலாண்மை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

மாணவியின் உயிரிழப்பை விபத்து என காண்பிக்கக்கூடாது பலரும் வலியுறுத்தினர். இந்நிலையில் திடுதிப்பென்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தங்களுக்கும் இந்த பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை, நாங்கள் இப்படி ஒரு பயிற்சியே அளிக்கவில்லை என கைவிரித்துள்ளது.

தேசிய பேரிடர்மேலாண்மை ஆணையத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“துரதிருஷ்டவசமாக நிகழ்ந்த இந்த சம்பவத்தில் நாம் ஒரு இளம்பெண்ணின் உயிரை இழந்துவிட்டோம்.  அவரது குடும்பத்தாருக்கு இதயபூர்வமான இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த பயிற்சியை தேசிய பேரிடர் மேலாண்மை மேற்கொள்ளவில்லை, பயிற்சியில் ஈடுபட்டு விபத்து ஏற்பட காரணமான அந்த பயிற்சியாளர் எங்களுடைய அதிகாரபூர்வ பயிற்சியாளர் அல்ல”

அதிர்ச்சிகரமான இந்த நழுவல் அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் நெட்டிசன்கள் கண்டித்துள்ளனர்.

பிராபகர் (Prabakar K‏ @PrabakarK4)என்பவர் தனது பதிவில், “ இதே போன்று எங்கள் கல்வி மையத்துக்கும் அவர் வந்து பயிற்சி கொடுத்து சான்றிதழ் கொடுத்தார். எப்படி நீங்கள் அவரை உங்கள் அமைப்பின் பயிற்சியாளர் இல்லை என்று மறுப்பீர்கள். நான் அவர் அளித்த சான்றிதழை சான்றாக அளிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

லெஸ்லி மார்ட்டின் என்பவர் பதிவில் (Leslie Martin D‏ @LeslieMartind )

உங்களுடைய இரங்கலை வரவேற்கிறேன், தேசிய பேரிடர் மேலாண்மைக்கும் இந்த பயிற்சிக்கும் சம்பந்தமில்லை என்று நீங்கள் குறிப்பிடும்போது, மாவட்ட நிர்வாகம் எப்படி இதுபோன்ற உயிரிழப்பை தடுக்காமல் செயல்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

கார்த்திக் ரெங்கராஜன்(Karthik Rengarajan@karthik_1710)என்பவர் பதிவில் “இரங்கல் தெரிவிப்பது உதவி செய்வது ஆகாது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பயிற்சியாளரும் கல்லூரி நிர்வாகமும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும், உடனடியாக அனைத்து கல்லூரிகளுக்கும் முறையான தேசிய பேரிடர் மேலாண்மை அங்கிகாரம் பெற்ற பயிற்சியாளரை நியமித்து இதுபோன்ற பயிற்சியை நடத்தவேண்டும் என ஒரு காலக்கெடு நிர்ணயித்து இந்த உத்தரவை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும். பின்பற்றாத கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் அப்சர்வர் (TamizhObserver‏ @TamizhObserver) என்பவர் பதிவில்: இது ஒரு அப்பட்டமான கொலை, பயிற்சியாளரும், கல்லூரி நிர்வாகத்தினரும் தண்டிக்கப்படவேண்டும், தேசிய பேரிடர் மேலாண்மை அங்கீகரிக்கும் பயிற்சியாளரால் மட்டுமே இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்பட வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் கடுமையாக எச்சரித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை தங்களுக்கு சம்பந்தமில்லை என்று கைவிரிக்கும்போது இந்தப்பயிற்சி எப்படி நடந்தது. பல கல்லூரிகளில் இதுபோன்ற ஆபத்தான பயிற்சிகள் நடத்தப்படுவதும் கண்காணிக்கப்பட வேண்டும்.