கோவை கல்லூரி மாணவி பலியான சம்பவம்; முழுக்க முழுக்க கவனக்குறைவே காரணம்: அமைச்சர் உதயகுமார்

0
0

கோவையில் கல்லூரி மாணவி உயிரிழந்தது முழுக்க முழுக்க கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக உரிய விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோவை தனியார் கல்லூரியான கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, அக்கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்த லோகேஸ்வரி (19) என்பவர், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு உரிய முறையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மேலிருந்து குதிக்க தயக்கம் காட்டிய மாணவியை வற்புறுத்தி குதிக்க வைத்தாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முழுக்க முழுக்க இச்சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பு என தெரிவித்துள்ளார்

மதுரை மாவட்டம் மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் விரும்பத்தகாதது ஆகும். இதுபோன்று நடைபெற்றிருக்கக் கூடாது. பேரிடர் பயிற்சி கவனக் குறைவாக நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகிறது. இதுபோன்றெல்லாம் பயிற்சி கொடுக்கக் கூடாது. ஏற்கெனவே இதற்கென வழிமுறைகள் உள்ளன.

தகுதியுள்ள பயிற்சியாளர்கள், நிபுணர்கள் இருக்கின்றனர். அவர்களை வைத்துதான் பயிற்சிகள் கொடுக்க முடியும். கவனக்குறைவால் தான் இந்த விபத்து நடைபெற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து விசாரணை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.