கோவை அருகே தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது மாடியிலிருந்து குதித்த மாணவி பலி

0
0

கோவை அருகே தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது, மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (19). இவர் வாளையார் சாலையில் நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்தார்.

அந்தக் கல்லூரியில் நேற்று தேசிய பேரிடர் மேலாண்மைப் பயிற்சி முகாம் நடந்துள்ளது. அதில் லோகேஸ்வரி உள்ளிட்ட 20 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிப்பது போன்ற பயிற்சியில் லோகேஸ்வரி ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து கீழே குதித்தபோது, எதிர்பாராதவிதமாக முதல் மாடியின் சிமென்ட் தரை மீது (சன்சேடு) விழுந்து, பின் தரையில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த லோகேஸ்வரியை, தொண்டாமுத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.