கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது மாணவி உயிரிழப்பு; குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு

0
0

கோவையில் தனியார் கல்லூரியில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோவை தனியார் கல்லூரியான கலைமகள் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, அக்கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்த லோகேஸ்வரி (19) என்பவர், உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு உரிய முறையில் பயிற்சி ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும் மேலிருந்து குதிக்க தயக்கம் காட்டிய மாணவியை வற்புறுத்தி குதிக்க வைத்தாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் லோகேஸ்வரி என்பவர், வியாழக்கிழமை அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த லோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணவர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரிக் கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கியஆறுமுகம் என்பவர் வியாழக்கிழமை இரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.