கோடம்பாக்கம் சந்திப்பு: ஒரே படம், எக்சக்க ரசிகர்கள்!

0
0

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாக நடித்து இயக்குநராகவும் அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆத்மிகா. சென்னையில் படித்து வளர்ந்த கோவைப் பெண்ணான இவர், குறும்படங்களில் நடித்து, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, மாடலிங் வழியாக சினிமாவில் நுழைந்தவர்.

அறிமுகப் படத்தின் வசூல் வெற்றியைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆகஸ்ட் 31-ம் வெளியாகவிருக்கும் ‘நரகாசுரன்’ படத்தில் நடித்திருக்கிறார். ஒரு படம் மட்டும் நடித்திருந்தாலும் இவரது இண்டாகிராஃம் மற்றும் முகநூல் பக்கத்தை ஐந்துலட்சம் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் நடிப்பதாக வந்த செய்தியை மறுத்துவிட்ட ஆத்மிகாவின் கண் சிமிட்டல் வீடியோவுக்கு முகநூலில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

தாணுவின் புதிய படம்

விக்ரம் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது ‘ஸ்கெட்ச்’ படம். அந்தப் படத்தைத் தொடர்ந்து முன்னாள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தயாரித்திருக்கும் புதிய படத்துக்கு ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு சூட்டியிருக்கிறார்கள். ராதாமோகன் இயக்கி முடித்திருக்கும் புதிய படம் இது.

விக்ரம்பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோருடன் ராதா மோகன் படங்களின் ஆஸ்தான நடிகராக வலம் வரும் இளங்கோ குமரவேலும் இதில் நடித்திருக்கிறார். ‘மொழி’ படத்தின் வசனகர்த்தாவான விஜி இதற்கும் வசனம் எழுதியிருப்பது ரசிகர்களைக் கவனிக்க வைத்திருக்கிறது. இதற்கிடையில் ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் ராதாமோகன்.

காதலும் பிரிவும்

மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஜீவாவின் உதவியாளர்களில் ஒருவர் கே சி சுந்தரம். இவர் ‘ஜூலைக் காற்றில்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இளமையில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் பிரிவையும் எதிர்கொள்ளக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். புதிய உறவையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சுவராசியமாக சொல்லும் படமே ‘ஜுலை காற்றில்’. என் குருநாதார் ஜீவாவின் மெல்லிய சாயலுடன் கூடிய காதல் சாரலாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறேன்” என்கிறார் சுந்தரம். இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தனது இருப்பை நிறுவ வருகிறார் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர்.

குயினாக மாறிய காஜால்!

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற இந்திப் படம் ‘குயின்’. தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் நான்கு தென்னிந்திய மொழிகளிளும் ஒரேநேரத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற தலைப்பில் தமிழில் தயாராகிவரும் இந்தப் படத்தில், கங்கனா ஏற்ற கதாபாத்திரத்தை காஜல் அகர்வால் ஏற்று நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னட மறுஆக்கங்களை இயக்கி வருகிறார் நடிகர் மற்றும் இயக்குநரான ரமேஷ் அரவிந்த்.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்துவிட்டார்கள். நான்கு மொழிக் கதாநாயகிகளில் காஜல் அகர்வாலின் நடிப்பு, எந்த அளவுக்கு வெளிப்பட்டிருக்கிறது என்பது படம் வெளியாக இருக்கும் வரும் அக்டோபர் மாதம் தெரிந்துவிடும். ‘குயின்’ படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதிதான் இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

யானைத் தோழி

பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கும்கி’. அந்தப் படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல், வேறு நடிகர்கள், வேறு களம் என அதன் இரண்டாம் பாகத்தை திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் பிரபுசாலமன். முதல் பாகத்தை நாயகனுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக எடுத்திருந்தார். ஆனால் அதன் இரண்டாம் பாகத்தை நாயகியை மையப்படுத்தி திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறாராம்.

கதையை நிவேதா பெத்துராஜிடம் கூற, வியந்துபோன அவரிடம் 70 நாட்கள் கால்ஷீட் கேட்டிருக்கிறாராம் இயக்குநர்.  ‘இது எனக்காவே எழுத்தப்பட்டக் கதைபோல் இருக்கிறது’ என்று கூறி நிவேதாவும் சம்மதித்திருக்கிறார். ‘கும்கி 2’-ல் யானைகளின் தோழியாகத் தோன்ற இருக்கிறார்.