கொல்லப்பட்டது வெளிநாட்டு தீவிரவாதி இல்லை; காணாமல் போன எங்கள் மகன்: கதறும் காஷ்மீர் குடும்பத்தினர்

0
0

ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டுத் தீவிரவாதி கொல்லப்பட்டதாக கூறியது உண்மை இல்லை; காணாமல் போனதாக நாங்கள் கருதிய காஷ்மீரைச் சேர்ந்த எங்கள் மகன் இதில் கொல்லப்பட்டுள்ளான் என காஷ்மீரைச் சேர்ந்த ஒரு குடும்பம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் எல்லை மாவட்டமான குப்வாராவில் உள்ள லங்காட் நகரத்தில் வசிக்கும் குடும்பம், தங்கள் மகன் முசாஃபர் அகமது மீரை காணவில்லை என ஆகஸ்ட் 9 ம் தேதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.. அன்றுதான் பாரமுல்லா மாவட்டம், ரபியபாத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இச்சண்டையில் கொல்லப்பட்ட முசாபர் அஹ்மத் மிர்ரின் தந்தை பெயர் பஷீர் அஹ்மது மிர் என்றுள்ளதாக போலீஸ் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான ஒரு அறிவிப்பையும் ராணுவம் நேற்று வெளியிட்டது. அதில் ரபியாபாத் அருகே தூணிவாரி காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தது. அவர்கள் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டுத் தீவிரவாதி என்றும் ராணுவம் அதில் குறிப்பிட்டுள்ளது.

இக்கும்பல் சமீபத்தில்தான் யூரி செக்டர் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் வழியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஊடுருவி வந்துள்ளாக்ள் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பம் தங்கள் மகன் முசாபர் அஹ்மது மிர் கொல்லப்பட்டதாக கூறியுள்ளதன்பேரில் இன்று (சனிக்கிழமை) லங்கேட்டில் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.