கேரள வெள்ளச் சேதத்தை நாளை ஆய்வு செய்கிறார் ராஜ்நாத் சிங்; இடுக்கி அணை திறப்பால் மூழ்கியது கொச்சி: பாதுகாப்பான இடங்களுக்கு 4,000 பேர் வெளியேற்றம்

0
0

கனமழை காரணமாக கேரள மாநிலத்தின் இடுக்கி அணை நேற்று திறக்கப்பட்டதால் கொச்சி நகரில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை யடுத்து, பாதுகாப்பு நடவடிக்கை யாக, அங்கு தாழ்வான பகுதி களில் இருந்து 4,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கேரள வெள்ளச் சேதத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்யவுள்ளார்.

கேரள மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையின் காரணமாக, எர்ணாகுளம், கோழிக்கோடு, இடுக்கி, கண்ணூர், மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. மேலும், வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கனமழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணையில் நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து நேற்று முன்தினம் நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், பெரியாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந் நிலையில், நேற்றைக்கு, இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு விநாடிக்கு 35 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் கொச்சி நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

இதையடுத்து, பேரிடர் மீட்புப் படையினர் உடனடியாக செயல் பட்டு, தாழ்வான பகுதிகளில் இருந்த சுமார் 4,000 பேரை உட னடியாக அங்கிருந்து வெளி யேற்றினர். மேலும், பெரியாறு நதிக்கரையையொட்டி உள்ள மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. அவர்களைப் பாது காப்பான இடங்களுக்கு செல்லு மாறு கேரள அரசு அறிவுறுத்தி யுள்ளது. முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலு வலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

கொச்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருவதாக கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைப் படையின் 14 குழுக்கள் கேரளாவுக்கு நேற்று வந்தன. இதன் ஒரு குழுவில் 45 பேர் இருப்பர். இது தவிர, ராணுவத்தினர், கடற்படை யினர், கடலோரக் காவல் படை யினர் அடங்கிய 8 குழுக்களும் மாநிலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்கப்பட்டவர் களைத் தங்க வைப்பதற்காக கேரளா முழுவதும் 264 முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 24 மணிநேரமும் உணவு, குடிநீர், மருந்துகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மூணாறில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பிளம்சூடி என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 31 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கேரள மாநிலத்தில் வெள்ளச் சேதத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்யவுள்ளார். முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, அம்மாநிலத்தில் வெள்ள நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும் எனவும் அப்போது ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.