கேரள பெருமழையின் ‘ஹீரோ’ – வெள்ளத்தில் சிக்கிய சிறுவனை பாலத்தில் ஓடி காப்பாற்றிய வீரர்: வைரலாகும் வீடியோ

0
0

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அங்கு அண்மையில் இடுக்கி அணை திறந்தபோது 35 ஆயிரம் கன அடி நீர் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டது. இதனால் செருதோணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

 

இடுக்கி அணையையொட்டிய செருதோணி ஆற்றை கடந்து செல்லுவதற்காக பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அணை திறக்கும் முன்பாகவே முன்னெச்சரிக்கை விடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. எனினும் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை பார்ப்தற்காக அந்த பகுதியை சேர்ந்த சிலர் திரண்டு இருந்தனர்.

அப்போது சிறுவன் ஒருவன் அந்த பாலத்தின் மீது நின்றபடி அணை திறப்பதை பார்த்துக் கொண்டிருந்தான். வெள்ள நீர் வருவதை அறியாத அந்த சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது கண நேரத்தில் இதனை கவனித்த தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த வீரர் கன்னையா குமார் உடனடியாக பாய்ந்து சென்று அந்த சிறுவனை தூக்கிக் கொண்டு பாலத்தின் வழியே ஓடினார். கரை புரண்டு ஓடி வந்த வெள்ளத்தை வேகத்தை மிஞ்சும் விதமாக அவர் ஓடினார்.

சிறுவனை மீட்ட கன்னையா குமார்   –  படம்: ஏஎன்ஐ

 

ஒரு சில மணி துளிகளுக்குள் அவர் அந்த பாலத்தை கடந்து விட்டார். அடுத்த சில நொடிகளில் அந்த பாலத்தை பெரு வெள்ளம் அடித்துச் சென்றது. அந்த வீரர் உடனடியாக செயல்படாவிட்டால் அந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பான். அணை திறக்கும் காட்சியை படம் பிடிக்க வந்த ஊடகத்தினர் சிலர் இந்த காட்சியை படம் பிடித்துள்ளனர்.

இந்த காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த சிறுவனை காப்பாற்றிய தேசிய பேரிடர் மீட்பு படை வீரர் கன்னையாகுமார் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் தற்போது கேரள மக்களிடையே கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். அவருக்கு மக்கள் பலரும் வாழ்த்தும், நன்றியும் கூறி வருகின்றனர்.