கேரளா வெள்ளம்: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம், வீடிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

0
0

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பெருமழை பெய்து வருகிறது, அணைகள் பலவும் நிரம்பி வழிய, உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளன, இதனையடுத்து பலபகுதிகளிலும் கேரளாவில் வெள்ளக்காடாகியுள்ளது. இதில் 29 பேர் பலியாகியுள்ளனர். ஏராளோமானோர் வீடிழந்துள்ளனர்

இந்நிலையில் சனிக்கிழமையன்று வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதல்வர் பினராயி விஜயன் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சமும், வெள்ளத்தில் வீடிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

இடுக்கி, ஆலப்புழா, எர்ணாக்குளம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் முதல்வர் வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நிலவரங்கள் குறித்து பினராயி விஜயனிடம் கேட்டறிந்தனர்.

கடந்த 26 ஆண்டுகளில் முதல் முறையாக செருதோனி அணையின் 5 ஷட்டர்களும் திறக்கப்பட்டன. ஆசியாவில் உள்ள பெரிய அணைக்கட்டுகளில் இடுக்கி அணையும் ஒன்று. இது தவிர 24 அணைகளிலும் உள்ள உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது

மொத்தமாக 12,240 குடும்பங்கள், அதாவது 53,501 தனி நபர்கள் 439 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 14 வரை வயநாடு மாவட்டத்துக்கும் ஆகஸ்ட் 13 வரை இடுக்கி மாவட்டத்துக்கு சிகப்பு எச்சரிக்கை என்ற உச்ச பட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரழிவு மேலாண்மை ஆணையம் 8 மாவட்டங்களுக்கு உச்ச பட்ச எச்சரிக்கை விடுத்துள்ளது. கடல் ஆய்வுத் தகவல் மையமும் கேரளாவில் 11 முதல் 15ம் தேதி வரை உயர் அலை வெள்ள எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

கேரளாவில் என்றும் இல்லாத வகையில் முதல்வர் பினராயி விஜயனும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா இருவரும் சேர்ந்து வயநாடில் வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டனர்.

படம். | சிறப்பு ஏற்பாடு.

 

நிலச்சரிவு வெள்ளங்களில் வீடிழிந்தோர் நிலம் வாங்க ரூ.6 லட்சம் நிவாரணமும், வீடுகட்ட ரூ.4 லட்சம் நிவாரணமுமாக ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். வெள்ளத்தில் ஆவணங்களை இழந்தோருக்கு ஆவணங்கள் மீண்டும் இலவசமாக உருவாக்கித் தரப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பாண்டிச்சேரி அரசு கேரள வெள்ளத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி:

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்காக பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும் வர்த்தகர்கள், வசதியானவர்கள் கேரளாவுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற மாநில அரசியல் தலைவர்களும் கேரளாவுக்கு உதவ முன் வந்துள்ளன.