கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.5 லட்சம்: தென்னிந்திய நடிகர் சங்கம் நிதியுதவி

0
0

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புக்கு 5 லட்சம் நிவாரண நிதி வழங்கியிருக்கிறது தென்னிந்திய நடிகர் சங்கம்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் யாரும் எதிர்பாராதவிதமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், கோழிக்கோடு, காஸர் கோடு, கண்ணூர், இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்கள் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், பலத்த மழையால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பயங்கர நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச் சரிவுக்கு, கேரளாவில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியை நடிகர்கள், பிரபலங்கள், மற்ற மாநில அரசுகள் வழங்கி வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் 5 லட்ச ரூபாய் வழங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 12) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது