கேரளாவுக்கு ரூ.1 கோடி வெள்ள நிவாரண நிதி: திமுக அறக்கட்டளை சார்பில் ஸ்டாலின் வழங்கினார்

0
0

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியை திமுக அறக்கட்டளை சார்பில் ஸ்டாலின் இன்று கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் யாரும் எதிர்பாராதவிதமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எர்ணாகுளம், கோழிக்கோடு, காஸர் கோடு, கண்ணூர், இடுக்கி, வயநாடு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்கள் வெளியேற வழியின்றி தவித்து வருகின்றனர்.

மேலும், பலத்த மழையால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பயங்கர நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. வெள்ளம் மற்றும் நிலச் சரிவுக்கு, கேரளாவில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியை நடிகர்கள், பிரபலங்கள், மற்ற மாநில அரசுகள் வழங்கி வரும் நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதியை ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இது தொடர்பாக திமுக இன்று வெளியிட்ட அறிக்கையில், ”கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில், திமுக அறக்கட்டளை சார்பாக ‘முதலமைச்சர் நிவாரண நிதி’க்கு ஒருகோடி ரூபாயினை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

இப்பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகி இருப்போருக்கு ஆறுதலையும் திமுக தெரிவித்துக் கொள்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.