கேரளாவில் கனமழை, வெள்ளம்: பினராயி விஜயனுடன் சென்று பார்வையிட்டார் ராஜ்நாத் சிங்

0
0

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் நேரில் சென்று பார்வையிட்டார். முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரள மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் கனமழையில் சிக்கி 35 பேர் பலியாகியுள்ளனர். 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

 

இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடிடுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் அல்போன்ஸ், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் உடன் சென்றனர். அப்போது வெள்ளம் பாதித்த இடங்களையும், சேத விவரங்களையும் அவர்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு விளக்கினர்.

ரூ. 1 கோடி நிதியுதவி

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரும், லூலு குழுமத்தின் தலைவருமான யூசுப் அலி 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தார். முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து இந்த நிதியை அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில் ‘‘கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவின்றி மக்கள் தவிப்பதை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்’’ எனக் கூறினார். இதனிடையே, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.