கெளதம் மேனனுடன் என்ன பிரச்சினை?- கார்த்திக் நரேன் விளக்கம்

0
0

கெளதம் மேனனுடன் என்ன பிரச்சினை என கார்த்திக் நரேன் விளக்கம் அளித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்தப் படத்தை, கார்த்திக் நரேனுடன் இணைந்து இயக்குநர் கெளதம் மேனன் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் இருவருக்கும் இடையில் தயாரிப்பு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்பட, அதுகுறித்து ட்விட்டரில் புலம்பியிருந்தார் கார்த்திக் நரேன்.

இந்நிலையில், ‘நரகாசூரன்’ இசை வெளியீட்டு விழாவில் இந்தப் பிரச்சினை குறித்து கார்த்திக் நரேனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கார்த்திக் நரேன், “என்னுடைய ‘துருவங்கள் 16’ படம் பார்த்துவிட்டு, ‘நாம மீட் பண்ணலாமா கார்த்திக்?’ என கெளதம் மேனன் சார் மெசேஜ் அனுப்பியிருந்தார். நானும் உடனே ‘ஓகே சார்’ என்று பதில் அனுப்பினேன். ஒரு வாரம் கழித்து மீட் பண்ணோம். ‘கார்த்திக், உங்க மனசுல ஏதாவது இருந்தா சொல்லுங்க, நாம சேர்ந்து பண்ணலாம்’ என்றார்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் கேட்டபோது நான் எதுவுமே யோசிக்கவில்லை. ஏனென்றால், நான் சினிமாவுக்குப் புதிது. ஒரு படம் தான் பண்ணியிருக்கேன். கெளதம் சார் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்பதால், அவர் கேட்டபோது என்னால் வேறெதையும் யோசிக்க முடியவில்லை. உடனே ‘ஓகே சார்’ என்று சொல்லிவிட்டேன்.

ஆனால், அவரால் புரொடக்‌ஷனில் கொஞ்சம் பண்ண முடியவில்லை. பத்ரி சார் முழுவதுமாகப் பார்த்துக் கொண்டார். நமக்குப் பிடித்தவர்கள் ஏதாவது பண்ணால்தான் நமக்குக் கோபம் அதிகமாக வருமில்லையா? என்னுடைய கோபம் அப்படிப்பட்ட சாதாரணக் கோபம்தான். அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருப்பதால், இதற்கு மேல் அதைப்பற்றி பேச வேண்டாம் என நினைக்கிறேன்” என்று முடித்துக் கொண்டார் கார்த்திக் நரேன்.

தற்போது கெளதம் மேனன் பெயர் இல்லாமல் தான் ‘நரகாசூரன்’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகின்றன.