கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் 4 மண்டலங்களில் குழு அமைக்க வேண்டும்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

0
0

கூட்டுறவு சங்க தேர்தல் முறை கேடுகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களை 4 மண்டலங்களாக பிரித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி திமுக கொறடா சக்கரபாணி உட்பட 600-க்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, கூட்டுறவு சங்க தேர்தல் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் சங்கத்துக்கான 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்துவதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களை 4 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒர் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். அதன்படி, சென்னையை மையமாக வைத்து வடக்கு மண்டலம், மதுரையை மையமாக வைத்து தெற்கு மண்டலம், கோவையை மையமாக வைத்து மேற்கு மண்டலம், திருச்சியை மையமாக வைத்து மத்திய மண்டலம் என 4 ஆக பிரித்து முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்.

ஓய்வுபெற்ற நீதிபதிகளின் தலைமையில் அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள், இணைப் பதிவாளர்கள் அடங்கிய குழுக்களை தமிழக அரசு ஒரு வாரத்தில் அமைக்க வேண்டும். அதன்பிறகு 3 மாதத்தில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சங்கங்களுக்கு மீண்டும் தேர்தலை நடத்துவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அதேபோல முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கெனவே வழக்கு தொடர்ந்த சங்கங்களைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்த குழுக்களிடம் தங்களது ஆட்சேப னைகளை தெரிவிக்க வேண்டும் எனக்கூறி, இதுதொடர்பாக இன்று விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.