கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர் நியமனம் தொடர்பான சட்டம் நீக்கம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

0
0

பேரவையில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:

கூட்டுறவு சங்கங்களில் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, சங்கங்களை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கான திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சமீபத்தில் தேர்தல் நடத்தப்பட்டு பல கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தனி அலுவலர்கள் நீக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்றுள்ளனர். இதனால், தனி அலுவலர்களை பணியமர்த்துவதற்கான சட்டங்கள் வழக்கற்று போனது. எனவே, இதற்கான சட்டங்கள், திருத்தச் சட்டங்களை நீக்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, தற்போது வழக்கத்தில் உள்ள, வழக்கிழந்துள்ள, தமிழ்நாடு பொதுச்சொத்து நம்பிக்கை மோசடி நடத்தை சட்டம், வங்காள மற்றும் மும்பை குழந்தைகள் சட்டம் ஆகிய இரு சட்டங்கள், பண்ணை சொத்து நிர்வாக ஒழுங்குமுறை விதி, இந்திய குடிமைப்பணி கடன்கள் தடை செய்தல் ஒழுங்குமுறை விதி, தமிழ்நாடு நிரந்தர தீர்வு ஒழுங்குமுறை விதி உள்ளிட்ட 10 விதிமுறைகளையும் நீக்க அரசு முடிவெடுத்துள்ளது.

மேலும், ராணுவத்தில் பணியாற்றும் ஒருவரிடம் இருந்து நிலவரி உள்ளிட்ட வருவாய் நிலுவையை வசூலிக்க, மாவட்ட ஆட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட படைப்பிரிவின் தலைவருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழ்நாடு வருவாய் வசூலித்தல் (ராணுவ உரிமையாளர்கள்) ஒழுங்குமுறை விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாக்களையும் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாக்கள் பின்னர் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற் றப்பட்டன.