குவிண்டால் நெல்லுக்கு ரூ.200 அதிகரிப்பு; பாஜகவின் திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரம்: ஸ்டாலின் விமர்சனம்

0
0

 குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 200 அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வில் புது வசந்தத்தை உருவாக்கி விட்டது போல், மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பின் ஒரு பகுதியாக, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை, குவிண்டாலுக்கு 200 ரூபாய் அதிகரித்து உத்தரவிட்டு, ஏதோ விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்பை நிறைவேற்றி, அவர்களுடைய வாழ்வில் என்றும் மாறாத புது வசந்தத்தை உருவாக்கி விட்டது போல், மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து 2014-15-ல் 50 ரூபாயும், 2015-16-ல் 50 ரூபாயும், 2016-17-ல் 60 ரூபாய், 2017-18-ல் 80 ரூபாய் என்று ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை ஏதோ பெயரளவிற்கு உயர்த்தி, நான்கு வருடங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு பல வகையிலும் விபரீத விளையாட்டு நடத்திவிட்டு, இப்போது நாடாளுமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டிய சூழலில், பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மத்திய பாஜக. அரசு, 200 ரூபாய் குவிண்டாலுக்கு அதிகரித்து விட்டதாகவும், 2014-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாகவும், முற்றிலும் திசைதிருப்பும் வகையிலான, தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வேதனையளிக்கிறது.

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 200 வீதம் உயர்த்தியிருந்தால் இன்றைக்கு விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு 1,750 ரூபாய் கிடைப்பதற்கு பதில், 2,310 ரூபாய் கிடைத்திருக்கும். இந்த நான்காண்டு காலம் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலையும், தொடர்கதையாகிவிட்ட அவர்தம் துயரங்களும் ஓரளவுக்கேனும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

அதேபோல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு, விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தாலும் இந்நேரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றப் பாதையில் வளம்பெறத் தொடங்கியிருக்கும்.

ஆனால், இந்த நான்கு வருடங்களில் விவசாயிகளின் நலன் பற்றியோ, நெடுங்காலமாக அவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படாமல், அவர்களைத் திரும்பிப் பார்க்கக்கூட அக்கறையின்றி இருந்து விட்டு, டெல்லிக்கே சென்று பலநாட்கள் பல்வேறு வகையிலும் போராடிய விவசாயிகளைக் கூட சந்திக்க மறுத்து, கைது செய்து சிறையிலடைத்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, இப்போது 200 ரூபாய் குவிண்டாலுக்கு உயர்த்தி விட்டோம் என்று, தம்பட்டம் அடிப்பதின் அரசியல் சுயநல அடிப்படையை நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு விவசாயிகள் மிகவும் துல்லியமாகவே மத்திய அரசின் கபட நாடகத்தை அறிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆகவே, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு உயர்த்திடுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் அடையாளமும் இல்லாமல், டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் பரிந்துரையைச் செயல்படுத்தும் ஆர்வமும் இல்லாமல், குவிண்டால் நெல்லுக்கு ரூபாய் 200 அதிகரித்து விட்டோம் என்ற வாய்ச்சவடால், நான்கு வருடங்களாக விவசாயிகளுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து செய்துள்ள துரோகத்திற்குத் தீர்வாகாது.

 நான்கு வருடம் விவசாயிகளைப் புறக்கணித்ததற்கு உரிய விடை தேடி நியாயம் செய்ய பாஜக அரசு உண்மையிலேயே விரும்பினால், உயர்ந்துவரும் இடுபொருள்களின் விலை செய்நேர்த்திச் சிரமங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,310 ரூபாய் கிடைக்கும் அளவிற்காவது குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

திமுகவின் தற்போதைய இலக்கு நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500 ரூபாய் அளிக்க வேண்டும் என்றாலும், மத்திய பாஜக அரசு நான்கு வருடங்களாக விவசாயிகளைக் கடுமையாக வஞ்சித்ததைச் சிறிதளவாவது ஈடு செய்யும் வகையில், இந்த ஆண்டுக்கு ரூபாய் 2,310 ஆக உயர்த்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.